|
|
Chapter-8
|
|
எட்டாவது அத்தியாயம்
நாரத
மகரிஷியைப் பார்த்து
மற்ற மகரிஷிகள் கூறுகின்றனர்
- ஸ்வாமி! தேவரீர் மூலமாக
ப்ரஹ்லாதனின் சரிதத்தை
நாங்கள் கேட்டோம். உலகத்திலேயே
பக்தாக்ரகண்யனும் அஸுர
சிசுவுமான ப்ரஹ்லாதனுடைய
சரித்திரம் உலகத்தை தூய்மை
படுத்துகிறது. கேட்க
கேட்க ஆனந்தத்தை கொடுக்கிறது.
மூன்று உலகங்களையும்
நிலை படுத்துகிறது. இது
மேன்மையை விளைவிக்கக்
கூடியது. ஏதோ புண்ணிய
விசேஷத்தால் தேவரீர்
சொல்ல நாங்கள் கேட்டோம்.
இப்படிப் பட்ட பகவத்
சம்மந்தமான புண்ணியத்தைக்
கொடுக்ககூடிய கதைகள்
கலியுகத்தில் பிறந்த
ஜனங்களின் பாவங்களை வேருடன்
போக்கக்கூடியவை.
ஹே
ப்ரஹ்மன்! எத்தனையோ
கல்பங்கள் அழிந்திருக்கின்றன.
இதுவரையில் இப்படிப்பட்ட
புனிதமான விருத்தாந்தத்தை
யாரும் கூறியதும் இல்லை.
கேட்டதும் இல்லை. அஹோபில
க்ஷேத்திரத்தின் மஹாத்மியம்
மிகவும் உயர்ந்தது. ஸ்ரீ
நரசிம்ஹனிடத்தில் பற்றுதலை
ஏற்படுத்தக் கூடியது.
அஸுர வம்ஸத்தில் பிறந்த
சிறுவனான ப்ரஹ்லாதனுக்கு
பகவானிடத்தில் இப்படிப்பட்ட
பக்தி எப்படி உண்டாயிற்றோ?
இப்பொழுதுதான் நாங்கள்
பரிசுத்தர்களானோம்.
பகவத் கதையும் மிகவும்
ஸாரமான பொருள்களோடு
கூடியதாயிற்று.
ஜனார்தனான
பகவான் கேவலம் பக்தியைக்
கொண்டே சந்தோஷமடைகிறான்.
மற்ற உபாயங்களில் எதுவும்
பகவான் சந்தோஷமடைய காரணமாகாது.
வயதில் பெரியவன் என்ற
காரணத்தினால் ஒருவனிடம்
பகவான் ப்ரீதியடைய மாட்டான்.
தலை நரைத்துவிட்டது என்ற
காரணமும் இதற்கு பயன்படாது.
"செல்வத்தாலும் பந்துக்களாலும்
உயர்ந்தவன் ஒருவன்" என்ற
காரணமும் பகவானின் ப்ரீதியை
பெற பயன்படாது. பாதுகையோ,
"ராஜ்யத்தையாள எனக்கு
சக்தி ஏது? தவிர முள்ளும்
கல்லும் நிறைந்த காட்டில்
நான் இல்லாமல் ராமனால்
நடக்கமுடியுமா?" என்றாள்.
அதைக் கேட்ட பிராட்டி
"என் கடாக்ஷத்தின் சக்தியை
உனக்கு கொடுக்கிறேன்.
அதைக்கொண்டு நீ ராஜ்யத்தை
பதிநான்கு வருஷமும் தைரியமாக
ஆளலாம்" என்றாள். அதன்படியே
பாதுகை பதிநான்கு வருஷ
காலம் நல்லாட்சி நடத்தினாள்.
இத்தனை நாளாக
அயோத்தியை தசரதர் ஆண்டார்.
இந்த பதினான்கு வருஷமும்
சீதையின் கடாக்ஷ மூலமாக
அயோத்தியை பாதுகை ஆண்டாள்.
முன்பு இருந்ததைவிட வருமானம்
பத்து மடங்கு அதிகமாயிற்று.
பழையபடி பாதுகையை பெருமாள்
திருவடியில் ஸமர்ப்பித்தபோது
பரதன், "உமது தேஜஸ்ஸினால்
வருமானம் பத்துப் பங்கு
பெருகி அதிகமாக சேர்த்து
வைத்திருக்கிறேன்" என்று
சொன்னான். இதனால், "ராமனின்
தேஜஸ்ஸினால் வருமானம்
பத்து மடங்கு அதிமானதாக
தெரிகிறதே தவிற, ஸீதையின்
கடாக்ஷத்தால் அதிகமானதாக
தெரியவில்லையே?" என்று
சிலர் கேட்கலாம்.
பரதன்
இந்த வார்த்தையை சொன்னபோது
அயோத்தியின் மக்கள்
அனைவரும் இருந்தார்கள்.
அவர்கள் முன்பு ராமரை
உயர்த்தி சொன்னால்தான்
பதிவிரதையான ஸீதை சந்தோஷப்படுவாள்
என்று கருதித்தான் பரதன்
இப்படிச் சொன்னான்.
ஸமர்த்தையான
ஒரு பெண் தனது புருஷனால்
செய்ய முடியாத காரியங்களை
தானே செய்து "இதை என் கணவர்
செய்தார்" என்று பெருமையாயச்
சொல்வதைப் பார்க்கிறோம்.
ஸாமர்த்தியம்
இல்லாத ஒரு பெண்ணை மணந்து
கொண்டவன் வாசற் கதவை
போட்டுக் கொண்டு புத்தி
ஸாமர்த்தியத்தினால்
செய்யக்கூடிய பல காரியங்களை
தானே செய்து தன் மனைவி
செய்ததாக பலரிடம் சொல்லிக்
கொள்ளும் குடும்பமும்
உண்டு. ஆனால் ராமரது குடும்பம்
அப்படி பட்டதல்ல. ராமர்
எது செய்தாலும் ஸீதையைக்
கேட்டே செய்வாராம்.
உண்மையில்
ஸீதாபிராட்டியின் கடாக்ஷத்தினால்தான்
பாதுகை ராஜ்யத்தை ஆண்டாள்.
பாதுகை தன் சக்தியை பிராட்டிக்கு
கொடுத்தாள். இது உண்மை.
இல்லாவிடில் லக்ஷ்மி
தாமரைப் பூவில் காலை
வைத்தாலும் முள்ளின்
மேல் கால் வைப்பது போல
கஷ்டப்படும் லக்ஷ்மி
அத்தகைய திருவடியால்
தண்ட காரண்யத்திலுள்ள
கூரான கல் முள் தர்ப்பம்
முதலியவற்றை நசுக்கி,
ராமருக்கு (பிராட்டி)
வழி செய்து கொடுத்தாள்.
"அக்ரதஸ் தே கமிஷ்யாமி
ம்ருத்நந்தீகுசகண்டகாந்
இதிஸீராபி யத்வ்ருத்திமியேஷ"
என்று பாதுஹா ஸஹஸ்ரத்தில்
உள்ளதை காணலாம். "அபி" சப்தத்தால்
பாதுகை லக்ஷ்மி கடாக்ஷத்தை
அபேஷித்தாள் என்றும்
ஏற்படுகிறது.
ஆகையால்
லக்ஷ்மிகடாக்ஷம் பெற்றால்
அசேதனமும் அரசாளும் என்று
தெரிகிறது. சேதனர்களைப்
பற்றி கேட்பானேன்? லக்ஷ்மி
கடாக்ஷம் கொஞ்சம் பெற்றவர்கள்
இந்திராதி தேவர்களாக
ஆனார்கள். பூர்ணகடாக்ஷம்
பெற்ற எம்பெருமான் தேவாதி
தேவனாக ஸகல புவன ஸம்ரக்ஷ்ண
சீலனாக ஆனான். பக்தனான
அஸுர சிசுவின் வார்த்தைக்கு
இணங்கி அதே காலத்தில்
மிக வேகத்துடன் தூணில்
ஆவிர்பவித்த இப்படிப்பட்ட
தெய்வத்தைக்காட்டிலும்
உயர்ந்தது வேறு எதுவும்
ஆகமாட்டாது. பூலோகத்தில்
பக்தனின் வார்த்தையை
பரிபாலனம் செய்வதற்காக
நரம் தளர்ந்த சிங்கமாக
தூணில் அவதரித்தது எல்லா
அவதாரங்களையும் விட இந்த
அவதாரத்திற்குச் சிறப்பையும்
முக்யத்துவத்தையும்
பகவான் வெளிப்படுத்தினான்.
லோகத்தில் ந்ருஸிம்ஹனுடைய
வைபவத்தை அறியாதவர்கள்
மூடர்கள். பக்திக்கு
இருப்பிடமான ப்ரஹ்லாதனை
எந்த ந்ருஸிம்ஹ ஸ்வாமி
அபிஷேகம் செய்வித்தாரோ
அந்த பகவானை துதிக்காதவர்களின்
பிறப்பு பயனற்றதாகும்.
அவர்கள் கோரமான நரகத்தை
அநுபவிப்பர். நாங்கள்
உலகத்திலேயே உயர்ந்தவர்களாக
ஆனோம்.
நாரத மகரிஷியே!
மற்றொரு விஷயத்தைக்கேட்க
நாங்கள் விரும்புகிறோம்.
இந்த ந்ருஸிம்ஹன் ஹிரண்யகசிபுவை
ஸம்ஹரித்து ப்ரஹலாதனுக்கு
முடிசூட்டிய பிறகும்
உலகத்திற்கே மிகுந்த
பயத்தை கொடுக்கக்கூடிய
சரபம் என்னும் உக்ரமான
ஒரு மிருகத்தை தனது கூர்மையான
நகங்களாலே கொன்றான்
என்று வாமதேவ மகரிஷி
ஒரு சமயம் எங்களிடம்
கூறியிருக்கிறார். அதை
எங்களுக்கு விஸ்தாரமாக
கிருபை கூர்ந்து சொல்ல
வேண்டும். ந்ருஸிம்ஹனுடைய
கதையை சொல்பவனுக்கும்,
கேட்பவனுக்கும் ஒரு போதும்
திருப்தி ஏற்படாது. பல
வருஷங்கள் பல கல்பங்கள்
கேட்டாலும், சொன்னாலும்,
மேலும் சொல்ல வேண்டும்,
கேட்க வேண்டும் என்ற
எண்ணமே ஏற்படும். அமுத
ஸமுத்ரத்தில் மூழ்கி
அமுதத்தை பருகுபவன் மற்றொன்றை
விரும்பமாட்டான். எனவே
தேவரீர் சரப விருத்தாந்தத்தை
விஸ்தாரமாக அருள்புரிய
வேண்டும் என்றார்கள்.
நாரதர்,
கூறலானார் - மகரிஷிகளே!
நீங்கள் அனைவரும் கேளுங்கள்
ந்ருஸிம்ஹ ஸ்வரூபத்தை
எடுத்த இந்த பகவான் சரபம்
என்ற மிருகத்தை எவ்வாறு
கொன்றான் என்பதை விஸ்தாரமாக
சொல்கிறேன். அஸுரக்குலத்தில்
ஈசுவரனாயும், நடத்தையிலும்,
புத்தியிலும் தாழ்ந்தவனாயும்
இருந்த ஹிரண்யனை பகவான்
ஸம்ஹரித்தான். அதனால்
பகவானின் கோபமும் கர்ஜனையும்
முதலில் குறைந்தன. மறுபடி
திடீரென்று கோபமும்
கர்ஜனையும் அதிகமாயின.
எல்லா உலகங்களையும் முன்பு
போல் மறுபடியும் இந்த
ந்ருஸிம்ஹஸ்வாமி கொளுத்த
ஆரம்பித்துவிட்டார்.
உலகத்துக்கே பதியான ந்ருஸிம்ஹனுடைய
ஆதாரமானது உக்ரகமாக புலப்பட்டது.
பயங்கரமான இந்த உருவத்தை
கண்டனர் தேவர்கள். தானவர்களும்
கண்டு நடுங்கினர். 'ஐயோ!
என்ன விபரீதம் நிகழப்போகிறதோ?
முள்போன்ற அஸுரனும்
இறந்துவிட்டான். இனியும்
பகவானின் கோபத்துக்கு
காரணம் என்ன? என்று ஆலோசித்தார்கள்.
தேவர்களும்
முனிவர்களும் ந்ருஸிம்ஹஸ்வாமியை
வணங்கி புகழ ஆரம்பித்தனர்
- செந்தாமரைக் கண்ணா! அஸுரேஸ்வரனான
ஹிரண்யகசிபுவை வென்று
வெற்றி பெற்றவனே! தேவா!
உலகத்துக்கு நாதனே! சக்ரபாணியே!
கதாதரனே! ஆதிதேவனே! தேவர்களுக்கெல்லாம்
ஈச்வரனே! அஸுரர்களை ஸம்ஹாரம்
செய்பவனே! சரணாகதர்களை
ரக்ஷிப்பவனே! ஞானரூபனே!
முக்குணங்களையும் கடந்தவனே!
எல்லோருக்கும் இருப்பிடமானவனே!
நன்கு விளங்குவாய். சுக
துக்கங்களற்றவனே! லோகரூபியே!
எல்லாப்பிராணிகளையும்
படைப்பவனே! நன்கு விளங்குவாய்!
எல்லா உலகத்துக்கும்
இருப்பிடமானவனே! செந்தாமரைக்
கண்ணனே. உலகமனைத்தையும்
படைத்துக் காத்து முடிவில்
அழிப்பவனே! அளவிட முடியாத
திருவளையாடல் புரிந்தவனே!
ஹே ந்ருஸிம்ஹா! சத்ரு
நாசகனே! உலகமனைத்தையும்
காப்பாயாக.
ஹிரண்யகசிபு
என்ற அஸுரனிடமிருந்து
பயந்த ஸ்தாவரஜங்கமான
இந்த உலகங்களை ரக்ஷிப்பதற்காகவன்றோ
நரம் கலந்த சிங்கமான
இவ்வடிவத்தை எடுத்தாய்?
அவனை அழித்த பின்பும்
உன் சினம் தணியவில்லையே.
வேதங்களாலும் அறிய முடியாத
ஸ்வரூபம் பெற்றவனே! சீற்றத்தை
விடுவாயாக; நாங்கள் பயந்து
நடுங்குகிறோம். எல்லா
உலகங்களையும் காப்பாற்றுவாயாக.
பரிசுத்தமான செயல்களை
செய்பவனே! அழியாதவனே!
என்று தேவர்கள் துதித்தனர்.
இப்படி
இந்திரன் முதலிய தேவர்களால்
துதிக்கப் பட்டும் அவனது
சீற்றம் தணியவில்லை.
பயங்கரமான உருவத்துடன்
காணப்பட்டான். கண்டோர்
நடுங்கினர். மேன்மேலும்
ரெளத்ராகாரமான அவனது
உருவத்தைக் கண்டு, 'என்ன
தீங்கு நேருமோ?' என அஞ்சினர்.
பிரளய அக்கினி போல்
பகவான் காணப்பட்டான்.
பிறகு தேவேந்திரன் பயத்தால்
நடுங்கி எல்லாத் தேவர்களும்
ரிஷிகளும் சூழ, நான்முக
கடவுளின் இருப்பிடத்தை
அடைந்தான். பாகசாஸனனான
இந்திரன் பிரம்மாவைக்
கண்டு வணங்கினான். பெரும்பலமுடைய
இந்திரன் கைகூப்பி பிரம்மனிடம்
சொல்ல ஆரம்பித்தான்.
"ந்ருஸிம்ஹ
வேஷம் தரித்த மகாவிஷ்ணுவினால்
உம்மிடம் வரம் பெற்ற
ஹிரண்யகசிபு என்ற அசுரன்
கொல்லப் பட்டான். உலகத்தை
எல்லா விதத்தாலும் துன்புறுத்திய
அந்த அஸுரேச்வரனை, ந்ருஸிம்ஹன்
மூன்று உலகங்களையும்
ரக்ஷிப்பதற்காக கொன்றுவிட்டான்.
ஆயினும், அவனது கோபம்
தணியவில்லை. மேன்மேலும்
அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது, கோபமடைந்த
ந்ருஸிம்ஹனைப் பார்த்து
மூன்று உலகங்களும் பயத்தால்
நடுங்குகின்றன. எல்லா
உலகங்களையும் படைப்பவரே!
பிராணிகளின் அபிப்ராயத்தைக்
கண்டறிபவரே! ந்ருஸிம்ஹனிடமிருந்து
நடுங்கும் எங்களை இரக்கத்துடன்
காப்பாற்ற வேண்டும்"
என்று தேவேந்திரன் வேண்டினான்.
இதைக்
கேட்ட பிரம்மா பதில்
சொல்லலானார் - தேவர்களே!
பயத்தை விட்டுவிடுங்கள்.
நான் உங்களுக்கு அபயம்
அளிக்கிறேன். அச்யுதனான
பகவான் நம்மை கட்டாயம்
ரக்ஷிப்பான். ஆயினும்
கோபம் கொண்ட இந்த ந்ருஸிம்ஹ
ஸ்வாமியை கோபமிழக்க
செய்ய நம்மால் முடியாது.
இவருடைய கோபத்தை ஆற்றுவது
நமக்கு சாத்யமன்று. பிநாகியான
பரமேஸ்வரனைத் தவிர, வேறு
யாராலும் இவரது சினத்தைப்
போக்க முடியாது. ந்ருஸிம்ஹனோ
மகத்தான கோபமுள்ளவன்.
அவனிடம் நம்மால் அணுகவும்
முடியாது. நாம் அனைவரும்
பரமசிவனிடம் சென்று வணங்கி
வேண்டுவோம். இதைத்தவிர
வேறு வழி கிடையாது. ரிஷபவாகனனும்,
சூலத்தை கையிலுடையவனுமான
மகா தேவனை வணங்குவோம்.
பரமேச்வரன்
தேவர்களுக்கெல்லாம்
முதல் தெய்வம். மங்களத்தை
அளிப்பவன். அளவற்ற பராக்கிரமமுடையவன்,
முன்பு உலகத்தை காக்க
விரும்பி ஒருவராலும்
செய்ய முடியாத செய்லை
செய்தவன். அறம், பொருள்,
இன்பம், வீடு என்ற நால்வகை
புருஷார்த்தத்தை அளிக்கும்
பரமேச்வரன், உக்கிரமான
செயலைப் புரிந்த மூன்று
அஸுரர்களின் பட்டணத்தை
அழித்து த்ரிபுரஸம்ஹரி
என்ற பெயர் பெற்றவன்.
மேலும்,
பஞ்சஜனன் என்ற கொடிய
அரக்கன் ஒருவன் இருந்தான்.
யுத்தத்தில் அவனுடைய
ஒருவரும் போர்புரிய
இயலாது. அத்தகைய பலபராக்ரமமுடையவன்.
அத்தகைய நூறு யோஜனை
உயரமும் நூறு யோஜனை
பருமனும் உடையவன். அவனைக்
கண்டு அனைவரும் நடுங்கினர்.
ஒருவராலும் வெல்ல முடியாத
அவனுடன் நூறு வருஷகாலம்
போர்புரிந்து சூலமென்னும்
ஆயுதத்தைக் கொண்டு பரமசிவன்
அவனைக் கொன்றான். ஆகவே
பரமசிவனிடம் சென்று நம்முடைய
குறையைக் கூறுவோம்.
ஸாம பேத தான தண்டம் என்ற
உபாயங்களாலே வெல்ல முடியாத
ந்ருஸிம்ஹனை சந்திர சேகரனான
ஈசுவரன் ஏதாவது உபாயத்தினால்
அணுகி, அவனது சீற்றத்தை
ஆற்றுவான். தேவர்களாகிய
நமக்கு இதத்தை விரும்பி
பரமேச்வரன் ந்ருஸிம்ஹனுடைய
கோபத்தை ஆற்ற ஆவல் கொள்வான்.
மன்மதனை எரித்த உமாபதியான
சிவனை நாம் வேண்டுவோம்.
ந்ருஸிம்ஹனிடமிருந்து
உண்டான நமது பயத்தை அவன்
நீக்குவான் என்று பிரம்மா
தேவேந்திரனிடம் சொல்லி
பரமேசுவரனை பார்ப்பதற்கு
கைலாயமலைக்கு சென்றான்.
தேவர்களும்
யக்ஷர்களும் உடன் சென்றனர்.
கடல்கள், நதிகள், திசைகள்,
பிசாசங்கள் மற்றும் பலவும்
பிரம்மாவுடன் சென்றன.
மலைகள், பாம்புகள், எட்டு
லோகபாலர்கள், பிரம்மாவை
சூழந்து சென்றனர். இவ்வாறு
முனிவர்களும் மகரிஷிகளும்
கைலாயத்தை அடைந்தனர்.
பிதாமகரான ப்ரம்ம தேவர்
தானவர் அனைவரோடும் சீக்கிரத்திலேயே
கைலாசமலையை அடைந்தார்.
அங்கே பரமேச்வரனைப் பார்த்தனர்.
ஒளியோடு கூடியவரும்,
கோடி சூரியனுக்கு இணையானவரும்
பார்வதியால் ஸேவிக்கப்பட்டவருமான
பரமேச்வரனை மஹாலக்ஷ்மியால்
ஸேவிக்கப்பட்ட நாராயணனை
போல் பார்த்தனர்.
பிரம்மாவின்
புத்திரரும் எல்லாமறிந்தவருமான
பரமசிவன் தகப்பனாரைக்
கண்டு கெளரவத்துடன் இனிமையான
வார்த்தைகளை சொல்ல ஆரம்பித்தார்.
"நான்முகரே! தேவர்களுடன்
தேவரீர் இங்கு வந்துள்ள
காரணமென்ன? அளவற்ற பராக்கிரமமுடைய
எல்லாத தேவர்களும் ஸுகத்துடன்
இருக்கிறார்களா? அவர்களுடைய
யோகக்ஷேமங்களுக்கு
குறை ஏதுமில்லையே? தலைவர்களுடன்
தேவேந்திரன் இங்கு ஏன்
வந்துள்ளான்? தேவர், கந்தர்வர்
யக்ஷர் மகரிஷிகள், தபோதனர்கள்,
இவர்களின் வருகைக்கு
காரணம் என்ன?" என்று பரமசிவன்
கேட்டார்.
இவ்வாறு பரமசிவன்
கேட்டதற்கு பிரம்மா பதில்
சொல்லுகிறார். "சங்கரனே!
தேவர்களுக்கெல்லாம்
ஆதியாய் உயர்ந்தவனான
நீ எல்லாத் தேவர்களுக்கும்
உயிரையும் இஷ்டமான வரத்தையும்
கொடுப்பதில் ஸமர்த்தனாக
இருக்கிறாய். அப்படி
இருக்க, தேவதைகளுக்கு
எப்படி அசுபம் ஏற்படும்?
ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்.
அதை நன்கு கேட்டுத் தேவர்களை
ரக்ஷிப்பாயாக. அது உன்
கடமை. சந்திரசேகரனே! முன்பு
ஹிரண்யகசிபு என்ற அசுரனுடைய
வதத்தை விரும்பிய நாம்
பிரார்த்திக்க, அஸுரவித்வம்
ஸகாரரான மகாவிஷ்ணு உலகத்தை
ரக்ஷிக்க ந்ருஸிம்ஹராக
அவதாரம் செய்து அந்த
அஸுரனை மிக்க சினம் கொண்டு
வதம் செய்தார். அப்பொழுது
அவ்வெம்பெருமானுக்கு
உண்டான கோபம் மிக கடோரம்.
அந்த கோபம் இன்னும்
சாந்தியடையவில்லை. அந்த
பகவான் கோபமுற்றதனால்
எல்லா உலகங்களும் நடுங்குகின்றன.
அதனால் அனைவருக்கும்
ஏற்பட்ட தாபம் தாங்க
முடியாமல் உள்ளது. அந்த
தாபம் அவர்களுக்கு இல்லாமற்
செய்யவேண்டும். அந்த
மகாத்மாவின் சினமும்
அடங்க வேண்டும். உன்னை
தவிர, தேவர்களை காப்பவர்
வேறு யாரும் இல்லை. ந்ருஸிம்ஹனிடம்
உண்டான பயத்தை நீ ஒருவன்தான்
அழிப்பாய். இந்த நோக்கத்துடனேயே
நாங்கள் உன்னிடம் வந்துள்ளோம்"
என்றார்.
பிரம்மா கூறிய
வார்த்தைகளைப் பசுபதி
கேட்டு, முகூர்த்த காலம்
ஆழ்ந்து யோசனை செய்தார்.
பிறகு பிரம்மாவை பார்த்து
சொல்ல தொடங்கினார்.
கொடிய அரக்கனான ஹிரண்யகசிபு
மகாபலிஷ்டன் அவனுடைய
பராக்ரமத்தைக் கண்டு
உலகம் அனைத்தும் நடுங்கியது.
அப்படிப்பட்ட ஹிரண்யகசிபுவை
மிக சினம் கொண்டு ந்ருஸிம்ஹர்
வென்றார் என்றால், அந்த
மகாத்மாவின் சினத்தை
யாரால் தணிக்க முடியும்?
அவரிடம் அஞ்சி வாயுதேவதை
நடுங்குகிறது. சூரியன்
தபிக்கிறான். அவரிடம்
உண்டான பயத்தால் பூமி
எல்லோரையும் தாங்குகிறது.
இப்படி எல்லோருமே அவரவருடைய
வேலையை ஒழுங்காக நடத்தி
வருகின்றனர். தங்களது
கடமைகளை சரிவர செய்யாவிட்டால்
என்ன நேருமோ என்று அஞ்சுகின்றனர்.
இப்படி
எல்லோரையும் நடுங்க
செய்கிற மகாவிஷ்ணுவின்
சினத்தை போர்புரிந்து
அடக்க யாரால் முடியும்?
ஆனாலும் நான் தியானம்
செய்வதில் ஓர் உபாயம்
புலப்பட்டது. அவ்வழியில்
நாம் இறங்க வேண்டும்.
வேறு எந்த மார்க்கமும்
இவ்விஷயத்தில் பயன்படாது.
அதாவது குதிரைகளுக்கு
எருமை பகை; யானைகளுக்கு
சிங்கம் பகை; குரங்குகளுக்கு
ஆடு பகை; பாம்புகளுக்கு
கருடன் பகை; எலிகளுக்கு
பூனை பகை; மான்களுக்கு
நாய் பகை; காக்கைகளுக்குக்
கோட்டான் பகை; இப்படி
ஒன்றுக்கொன்று பகையை
பார்த்திருக்கிறோம்.
அது போல் சிங்கங்களுக்கு
சரபம் என்னும் மிருகம்
பகை. ஆகையால், இந்த நரசிங்கனுடைய
சினத்தை போக்க, சரபத்தை
நாம் உண்டுபண்ணுவோம்.
அதன் மூலம் தேவர்கள்
பயத்தினின்று விடுபடுவார்கள்.
சரபம் ந்ருஸிம்ஹனை அழித்துவிடும்
என்று சொன்னார்.
பிறகு
பரமசிவன் சரபம் என்ற
மிருகத்தை தமது மாயாபலத்தால்
உடனடியாக உண்டு பண்ணினார்.
அதைக் கண்டதுமே உலகம்
நடுங்கியது. அதனுடைய
முகபாகத்தில் பரமசிவன்
உட்கார்ந்தார். பின்புறத்தில்
பிரம்மாவை அமரச் செய்தார்.
அதன் கண்களில் சந்திர
சூரியர்களையும், இரண்டு
இறக்கைகளில் வாயுதேவதையையும்,
கால்களில் எல்லா மலைகளையும்
அமர்த்தினார். பிரளயகாலத்தில்
எல்லாவற்றையும் அழிக்கக்
கூடிய ரெளத்திரம் முகத்தில்
ஏற்பட்டது. கண்கள் வெப்பத்தையும்,
பிரகாசத்தையும் உமிழ்ந்தன.
பின்புறத்தில் பல அஸுரர்களை
உண்டு பண்ணக்கூடிய சக்தியை
அந்த மிருகம் பெற்றிருந்தது.
இரண்டு இறக்கைகளும் எல்லாத்
திக்குகளிலும் சூறாவளி
போன்ற பெருங்காற்றை
உண்டு பண்ணின. நடந்து
சென்றபோது பெரிய பெரிய
மலைகளை போன்ற பாறைகள்
சிதறின. இப்படி அனைத்துலகுக்குமே
பெரும் பயத்தை பொடுக்கக்கூடியதாக
அமைந்திருந்தது அந்த
சரபம். இப்படி பட்ட சரபத்தை
ப்ரதம கூட்டங்களுக்கு
நாயகரான பரமசிவன் உண்டுபண்ணினார்.
பயங்கரமான ந்ருஸிம்ஹனுக்கும்
மிக்க பயத்தை உண்டு பண்ணக்கூடியதாக
இது அமைந்திருந்தது.
இப்படிப்பட்ட சரபத்தை
தேவர்கள் முன்னிட்டு
அஸுராந்தகனான ந்ருஸிம்ஹனை
வெல்வதற்காக அனுப்பினார்
பரமசிவன்.
அந்த சரபம்
கடுஞ்சினத்துடனும் மிக்க
வேகத்துடனும் ந்ருஸிம்ஹன்
இருந்த இடத்தை நோக்கி
ஓடிற்று. அது ஓடிய போது
மரங்கள் சாய்ந்தன. மலைகள்
பிளந்தன. ஜலம் கொதித்தது.
தீ அணைந்தது. தேவர்கள்
நடுங்கினர். மகரிஷிகள்
முனிவர்கள் அனைவரும்
உலகத்திற்கு என்ன தீங்கு
நேருமோ என்று அஞ்சினர்.
ஐம்பூதங்களும் தம் தம்
நன்மைகளை இழந்தன. பூகம்பம்
ஏற்பட்டது. அந்த சரபம்
பெரும் கர்ஜனை செய்தது.
அதனால் உலகங்கள் 'ஹா ஹா'
என்று அரற்றின. பூமி நடுங்கிற்று.
அஷ்ட திக்பாலர் நடுங்கினர்.
அஷ்டதிக்கஜங்கள் ஆடின.
ஏழு சமுத்திரங்களும்
கீழ் மேலாக மாறிவிட்டன.
சரபத்தின் கர்ஜனை பத்து
திக்குகளிலும் பரவியது.
இப்படி பயங்கரமான சரபம்
பெருஞ்சத்தத்துடன் ந்ருஸிம்ஹன்
இருந்த இடம் சென்று அடைந்தது.
நரசிங்கமும்
சரபத்தைக் கண்டு மிக்க
சினத்துடன் கர்ஜித்து
உலகத்துக்கே பயத்தை உண்டு
பண்ணிற்று. பின்பு இருவருக்கும்
போர் மூண்டது. ந்ருஸிம்ஹாகாரமான
விஷ்ணுவுக்கும், சரபாகாரமான
பரமசிவனுக்கும் பொறுமை
ஏற்படவில்லை. பொறாமைதான்
ஏற்பட்டது. மகரிஷிகளும்,
தேவர்களும், கந்தர்வர்களும்,
மற்றுமுள்ளவர்களும்
இதைக் கண்டு வியப்பையும்
துயரத்தையும் அடைந்தனர்.
இப்படி நடக்கும் போரில்
யார் வெற்றி பெறுவார்களோ
என்றும் சந்தேகித்தனர்.
பின்பு
மகாவிக்ஷ்ணுவான ந்ருஸிம்ஹன்
மிக்க சினம் கொண்டு
தமது பிடரிமயிர்களைப்
பொங்கச் செய்து, கோரப்பற்களை
நறநறவென்று கடித்துக்
கொண்டு சரபரூபியான பரமசிவன்
மீது பாய்ந்தார். தமது
கூர்மையான நகங்களால்
ஹிரண்யகசிபுவைக் கிழித்தது
போல் சரபத்தின் உடலையும்
கிழித்தார். சரபம் ஒளியற்று
உயிர்விட்டு கீழே விழுந்தது.
சரபம் ஸ்ரீந்ருஸிம்ஹனின்
ஒளியில் விளக்கில் விழுந்த
விட்டிற்பூச்சி போல
ஆகிவிட்டது.
('சம்புர்
பவந் ஹி சரப; சலபோ பபூவ')
இப்படி பரமசிவனால் அதிஷ்டிக்கப்பட்ட
சரபம் மகாவிஷ்ணுவால்
கொல்லப்பட்ட அளவில்
தேவர்களும் தேவரிஷிகளும்
செந்தாமரை கண்ணனான ந்ருஸிம்ஹனை
துதித்தனர்.
தெளிவடைந்த
பகவான், "உலகத்துக்கு
அநுக்ரஹம் செய்ய அவதரித்தவன்
நான். பயத்தை விடுங்கள்.
என் கோபம் நன்கு சாந்தியடைந்துவிட்டது.
நீங்கள் செய்த இந்த வழி
மிகவும் மெச்சத்தகுந்தது.
இது முதற்கொண்டு எல்லா
உலகமும் நோயற்றதாகவும்,
குறையற்றதாகவும், அச்சமற்றதாகவும்
ஆகக் கடவது. உண்மையில்
எல்லா இடத்திலும் பற்றுள்ள
எனக்கு கோபம் என்பது
ஏது? அதற்கு சாந்தி என்பதுதான்
ஏது? தேவர்களே! அந்த அந்த
காலங்களில் ஒவ்வொரு
விஷயத்தையும் மனத்தில்
கொண்டு செய்கிறேன்.
எல்லாம் உலகத்திற்கு
நன்மை ஏற்படுத்தவே என்பதை
ஆராய வேண்டும். பரமசிவன்
உண்டாக்கிய இந்த கிருத்ரிமமான
சரபம் யுத்தத்தில் இறந்துவிட்டது.
இதில் சந்தேகமில்லை.
தேவர்களே! நீங்கள் அனைவரும்
ஜுரமற்றவர்களாக உங்கள்
ஸ்தானங்களை அடைந்து மிக்க
மகிழ்ச்சியுடன் வாழ்வீர்களாக"
என்று அநுக்கிரகித்தார்.
இப்படி
ஆசையுடன் கூடிய ஸ்நேஹ
வார்த்தைகளை கேட்டதும்
பிரம்மா மிக்க மகிழ்ச்சியுடன்
பேசத் தொடங்கினார்.
ஹே ந்ருஸிம்ஹா ! மகாபுத்திசாலியான
பரமசிவன் உலக நன்மைக்காகவே
இந்த செயலை செய்தான்.
உன்னுடன் துரோகம் கொண்டோ,
உன்னை வென்று விடலாம்
என்று செருக்கு கொண்டோ,
இந்த செயலை செய்யவில்லை.
உன் பராக்ரமத்தை என்னை
போல் அவனும் அறிந்தவனே.
'எல்லா ஆத்மாக்களும்
பகவானாக உனக்கு தாஸபூதர்களானபடியால்,
அதில் ஒருவனான நானும்
உனக்கும் தாஸபூதனே' என்று
பலகால் உரைத்தவன் பரமசிவன்
உன் சினத்தை ஆற்ற நாங்கள்
மேற்கொண்ட இவ்வழியில்
ஏதாவது குற்றம் இருந்தால்
அதை நீ பொறுத்தருள வேண்டும்.
எல்லா தேவர்களும் நானும்
பரமசிவனும் உன்னால் போஷிக்கப்பட
வேண்டியவர்கள். குழந்தையின்
குற்றத்தை தாய் பொறுப்பது
போல் எங்கள் குற்றத்தை
பொறுத்து ரக்ஷிக்க வேண்டும்.
மற்றொரு
விஷயத்தை உன்னிடம் விண்ணப்பித்துக்
கொள்கிறேன். அதன்படி
அருள் புரிய வேண்டும்.
சரபரூபமடைந்த பரமசிவன்
எந்த இடத்தில் உன்னால்
அடிபட்டு கீழே விழுந்துள்ளானோ
அந்த ஸ்தானம் எல்லோராலும்
பூஜிக்கப்பட வேண்டியது.
உன் அருளினால் அதைக்
கண்டு வணங்கி க்ஷேமத்தை
அடைய வேண்டியது. இந்த
மலையில் சிறியதாகவும்
பெரியதாகவும் உள்ள குண்டங்கள்
எல்லாம் உன்னுடைய அநுக்கிரகத்தால்
சிவரூபமாகக்கடவ என்றார்.
இப்படி
பிரம்மா சொல்ல, பகவான்
அவருடைய வார்த்தையைக்
கேட்டு இந்த உயர்ந்த
வரத்தைக் கொடுத்தார்.
எல்லா தேவர்களும் பார்த்துக்
கொண்டிருக்கும்போதே
அதே இடத்தில் மறைந்துவிட்டார்.
இந்த
நிகழ்ச்சிகள் நடந்த மலை
கருட மலையின் சமீபத்திலேயே
உள்ளது. இந்த மலை முக்தர்களுடைய
பதவிக்கு அசைவு இல்லாதது
போல் எப்போதும் அசையாத
நிழலைப் பெற்ற கருடமலையின்
சமீபத்தில் இப்போதும்
காணப்படுகிறது. இந்த
மலையிலுள்ள குண்டங்கள்
(பாறைகள்) சிவனுடைய லிங்க
ரூபத்தை பெற்றுள்ளன.
இங்கே வந்து வணங்குபவர்கள்
பரம பாக்கியசாலிகள்.
இங்கு வந்து சிவஸூக்தத்தை
தினந்தோறும் பாராயணம்
செய்கிறவர்கள், ஆறே மாதங்களில்
ஸம்ஸார பந்தத்தினின்று
விடுபட்டு சிவஸாலோக்யத்தைப்
பெறுவர்.
இப்படிச் சரபம்
என்ற மிருகத்தின் வருகையையும்
ந்ருஸிம்ஹனுடைய கோபம்
தணிந்ததையும் நான் விவரித்தேன்.
ருத்திரனை வென்று அந்தரதானமடைந்ததும்,
எல்லா தேவர்களுக்கும்
அபயப்ரதானம் பண்ணி அவர்களை
அந்த அந்த பதவியில் அமர்த்தி,
பிரம்மதேவர் ஸர்வ முனிவர்களாலும்
பூஜிக்கப்பட்டவராய்,
ஒப்பற்ற தமது ஸ்தானத்தை
அடைந்தார் என்று நாரத
முனிவர் சொல்லி முடித்தார்.
ந்ருஸிம்ஹ
பிராணே :
தத: க்ருத்தோ
மஹாகாயோ ந்ருஸிம்ஹோ
பீமநிஸ்வந:| ஸஹஸ்ர கரஜை:
த்ரஸ்த: தஸ்ய காத்ராணீ
பீடயன் || தத: ஸ்புரச்ச்சடாடோப
: ருத்ரம் சரப ரூபிணம்
| வ்யதாரயன் நகை:
தீக்ஷ்ணை: ஹிரண்ய கசிபும்
யதா || நிஹதே சரபே தஸ்மிந்
ரெளத்ரே மது நிகாதினா
| துஷ்டுவு : புண்டரீகாக்ஷம்
தேவா : தேவர்ஷயஸ் ததா ||
வராஹ
புராணே :
ஹந்துமப் யாகதம்
ரெளத்ரம் சரபம் நர கேஸரீ
| நகை : விதாரயாமாஸ ஹிரண்யகசிபும்
யதா ||
புராணாந்தரே :
நமோஸ்து
நரஸிம்மாய லக்ஷ்மீஸதத
ஜிதக்ருதே | யத் க்ரோதாக்நெள
புரா ரெளத்ர: சரப: சலபாயிம்
||
*****
Chapter-9
|
|
|
|
|
|
|
|
|
|
|