துலா காவேரி மாகாத்மியம்
- 10
தர்மபுத்திரர் காவேரியின்
மகிமையைக் கேட்ட பிறகும்
மேன்மேலும் கேட்க வேண்டும்
என்ற விருப்பமே அவருக்கு
இருந்து வந்தது. கார்த்திகை
மாதத்தின் மகிமையை நாரதர்
கூறியதும், அந்த மாதத்தில்
திங்கட்கிழமையின் பெருமையை
அறிய வேண்டும் என்ற ஆசை
அதிகரித்தது.
"நாரத முனிவரே,
எல்லா மாதங்களுக்குள்
துலா மாதம் சிறந்தது.
வாரங்களுக்குள் கார்த்திகை
மாதச் சோமவாரம் சிறந்தது
என்று பெரியோர் சொல்லக்
கேட்டிருக்கிறேன். சோமவாரத்துக்கு
மேன்மை ஏன் உண்டாயிற்று?
அதற்கு என்ன பயன்? இந்த
விஷயத்தை எனக்கு தெளிவு
வரும்படி கூற வேண்டும்"
என்றார் தர்மபுத்திரர்.
நாரதர்
சொல்லத் தொடங்கினார்
- பாண்டுபுத்திரனே! சிறந்த
அரசனே! கார்த்திகை மாதச்
சொமவாரத்தின் பெருமையைக்
கூறுகிறேன், கேள். சோமவாரத்தில்
ஒருவன் விரதத்துடன் இருந்தால்
அளவற்ற பயனை அவன் அடைவான்.
விரதங்களுக்குள் சிறந்த
விரதம் பித்ருக்களுக்குத்
திருப்தியை அளிக்கக்
கூடியது. மாதங்களுக்குள்
துலா மாதமும் கார்த்திகை
மாதமும் எப்படிச் சிறந்தனவோ
அப்படியே கார்த்திகை
மாதச் சோமவாரம் மிக்க
சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை
மாதத்திய முப்பது தினங்களுமே
மிகச் சிறந்தவை. விஷ்ணுவின்
கோயில்களில் தீபாராதனம்
செய்வதற்கு உரிய நாட்கள்
இவை. இந்த முப்பது தினங்களும்
மகா விஷ்ணுவின் கோயிலில்
தீபங்களை ஏற்றி வைக்கிறவனுடைய
பித்ருக்கள் வலிய பாவங்களை
செய்து நரகத்தில் இருந்த
போதிலும் ஸ்வர்க்கத்தை
அடைவார்கள். இம் மாதத்திய
ஸோம வாரத்தன்று ஸர்வேச்வரனின்
கோயிலில் நெய்யைக் கொண்டு
விளக்கு ஏற்றுகிறவன்
தன் குலத்தில் இருந்த
பித்ருக்களை நரகத்திலிருந்து
விடுவிப்பான். அவன் முன்னோர்
நற்கதியைப் பெறுவர்.
இந்த தினத்தில் சிவபூஜை
செய்கிறவன் ச்ரத்தையுடன்
செய்ய வேண்டும். தங்கம்
திருடுதல், கள் குடித்தல்,
ப்ராஹ்மணனைக் கொல்லுதல்
முதலிய வலிய பாவங்களை
அவன் செய்திருந்த போதிலும்
அவை இவனிடத்திலிருந்து
விலகிவிடும்; தீயில்
பட்ட பஞ்சு போலாகிவிடும்.
இந்த
மாதத்தை நன்கு பயன்படுத்திக்
கொள்ள வேண்டும். அரச
மரத்தின் நிழலில் அந்த
மரத்தின் இலைகளை கொண்டு
விஷ்ணுவை அர்ச்சிக்க
வேண்டும். அதனால் உயர்ந்த
அறிவை பெறுவான். விஷ்ணுவின்
கோயிலில் ஆயிரம் விளக்குகளை
கார்த்திகை மாதத்தில்
கிருத்திகை என்னும் நக்ஷத்திரம்
சேரும்போது ஏற்ற வேண்டும்.
அப்படி ஏற்றுகிறவன் பிணியிலிருந்து
விடுபடுவான்; ஸகல ஆரோக்யத்துடன்
விளங்குவான். அஷ்ட ஐச்வர்யங்களுடன்
திகழ்வான். மாக மாதத்தில்
பிரயாகையில் நூறு வருஷம்
ஸ்நானம் செய்பவன் அடையும்
பலனை விஷ்ணு கோயிலில்
விளக்கு ஏற்றுகிறவன்
அடைவான். ஸோமவாரத்தில்
சிவலிங்கத்தை ஓர் அந்தணருக்குக்
கொடுக்க வேண்டும். அது
உயர்ந்த தர்மமாகும்.
அந்த தர்மத்தின் பயனை
வாயாலும் சொல்ல முடியாது.
எம்பெருமானுக்குக் கோயில்களில்
தீபாராதனம் அர்ச்சகர்கள்
செய்கின்றனர். பிறகு
தீபம் எரியும்போது தங்கள்
விரல்களால் அதை தொட்டு
தங்கள் உடலில் தடவி கொண்டால்
குஷ்டரோகம் நீங்கிவிடும்.
ஜுரம் முதலிய நோய்கள்
விலகும்.
எம்பெருமானுக்கு
ஆராதனம் செய்யும்போது
தூபத்தையும் தீபத்தையும்
ஸமர்ப்பிக்க வேண்டும்.
இவை இரண்டும் இல்லாமல்
ஆராதனம் செய்தால் புகை
சூழ்ந்த நரகத்தை அடைவான்;
குருடனாகவும் பிறப்பான்;
கோட்டானாகவும் பிறப்பான்.
நியமத்துடன் ஸோமவாரத்தில்
உபவாசமும் இரவில் விழிப்பும்
செய்பவன் சிவஸாயுஜ்யத்தை
அடைவான். கங்கை முதலிய
புண்ய நதிகளில் ஸ்நானம்
செய்தால் எல்லாவகையிலும்
பரிசுத்தி உண்டாகும்
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கங்கை முதலிய நதிகளில்
ஸ்நானம் செய்தால் எல்லாவகையிலும்
பரிசுத்தி உண்டாகும்
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கங்கை முதலிய நதிகளில்
ஸ்நானம் செய்ய வேண்டாம்;
இறைவனுக்குத் தூபாராதனத்தை
செய்து அதில் உண்டான
பஸ்மத்தை (சாமபலை) உடலில்
பூசிக் கொண்டால் போதும்;
ஸர்வ பாபங்களினின்றும்
விடுபடுவான். அபஸ்மாரம்,
குல்மரோகம், குஷ்டம்,
ஜுரம் முதலிய நோய்களை,
ஒரு மண்டலம் தூப பஸ்மத்தை
உடலில் தேய்த்துக் கொள்பவன்
போக்கடித்துக் கொள்வான்.
கங்கை யமுனை கோதாவரி
முதலிய நதிகளுக்கு எப்படி
நாம் செல்லமுடியும் என்று
நாம் வருந்த வேண்டாம்.
அங்கே சென்று ஸ்நானம்
செய்வதனால் உண்டாகும்
பலனை ஒரு நோடியிலேயே
தூப பஸ்மத்தை உடலில்
தரித்துக் பெறலாம். தூப
பஸ்மத்தை உடலில் தரித்து
ச்ராத்தத்தைச் செய்பவன்
கயா ச்ராத்த பலனைப் பெறுவான்.
இப்படி செய்வதனால் நரகத்திலுள்ள
இரு குலத்து பித்ருக்களும்
அதே க்ஷணத்தில் ஸ்வர்க்கத்தை
பெற்றுவிடுவார்கள்.
தர்மபுத்திரனே!
நீ எம்பெருமான் விஷயமான
நல்லறிவைப் பெற வேண்டும்;
மோக்ஷத்தை அடைய வேண்டும்,
ஸம்ஸார கஷ்டங்கள் நீங்க
வேண்டும் என்று விரும்புவாயானால்
ஸர்வேச்வரனான நாராயணனைக்
காலதாமதமின்றி அர்ச்சிப்பாயாக.
இவ்விஷயத்தில் ஓர் இதிகாசத்தைப்
பெரியோர் கூறுவர். அவதானத்துடன்
கேள்.
கோதாவரிக் கரையில்
வினதன் என்ற அந்தணன்
வசித்து வந்தான். அவன்
ச்ருதி ஸ்ம்ருதி முதலியவற்றைக்
கற்றுணர்ந்தவன்; வைதீக
தர்மங்களைச் செய்வதில்
தேர்ச்சி பெற்றவன்; ஸர்வ
சாஸ்திரங்களை கற்றவன்.
ஒருவன் கல்வியை நன்கு
கற்றவனாயின் தான் கற்ற
கல்விக்குத் தகுந்தாற்போல்
இருக்க வேண்டும். பிறர்
பொருளில் ஆசையின்றி
இருக்க வேண்டும். பிறர்
பார்க்கும்போது, மூக்கை
கையால் பிடித்துக்கொண்டு
பிராணாயாமம் செய்வதும்,
கைகளை துணியால் மூடிக்கொண்டு
ஜபம் செய்வதும், அவர்
சென்றபிறகு அவற்றை செய்யாமல்
இருப்பதும் கூடா. நம்
அந்தராத்மாவுக்கு விரோதமில்லாமல்,
சாஸ்திரங்களில் கூறியபடி
நற்காரியங்களில் ஈடுபட
வேண்டும். பிறர் நம்மை
புகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு
டம்பமாக வேலைகளை செய்வதில்
ஒரு பயனுமில்லை.
வினதன்
எவ்வளவு படித்தவனாயினும்
இதற்கு முரணாகவே வாழ்ந்து
வந்தான். டம்பமாகவே, பிறர்
பார்க்கும்போது கர்மங்களை
செய்வான். பிறர் பொருளை
அபகரிப்பதிலேயே நோக்கமுடையவன்.
பஸ்மத்தை உடல் முழுவதும்
பூசிக்கொள்பவன். நெற்றியில்
மூன்று பஸ்மக்கோடுகளை
அணிபவன். கழுத்திலிருந்து
ருத்ராக்ஷ மாலையை எடுக்கவே
மாட்டான். வெளியில் நற்காரியங்களைச்
செய்பவன் போல் நடிப்பான்.
தனிமையில் அளவற்ற துராசாரங்களைச்
செய்வான். தான் பார்க்கும்
பெண்களில் கண்ணோட்டம்
உடையவனாக இருப்பான்;
பிறர் பெண்களிடம் மனத்தைச்
செலுத்துவான். காரணமின்றியே
எப்போதும் பேசிக்கொண்டிருப்பான்.
ஸோமயாகம் முதலிய நற்காரியங்களைப்
பிறருக்காக செய்பவன்.
இதனால் இவனை ஸோமயாஜி
என்று அனைவரும் கூறித்
துதித்தனர். இவன் டம்பத்துக்காக
இம்மாதிரி செய்கிறான்
என்பதை யாரும் அறிந்திலர்.
ஸாதுக்கள் நிறைந்த இடங்களுக்கு
சென்று ஜபம் செய்துகொண்டேயிருப்பான்.
அவர்களை வணங்கித் துதிப்பான்.
அவர்கள் பூஜையில் இழிந்தபோது
அவர்களின் பொருளைத்
திருடிவிடுவான். கோபமுள்ளவன்;
தீக்குறளை சொல்பவன்.
இவ்வளவு தீ செயல்கைள்
செய்தபோதிலும் இவன்தான்
இவை அனைத்தையும் செய்தவன்
என்று ஒருவரும் அறிய
முடியாதபடி இருந்தான்.
"ஐயோ! மிகவும் ஸாதுக்களான
உங்கள் பொருள்களை எவனோ
அபகரித்துவிட்டானே; அவன்
மஹா பாபி. உங்களுக்கு
யாரோ இவ்வளவு ஹிம்ஸை
செய்துவிட்டார்களே!"
என்று அவர்களிடத்தில்
சொல்லி, யோக்யன்போல்
நடித்து அவர்களின் அன்புக்கு
இலக்காகவே இருந்து வந்தான்.
இம்மாதிரி நடித்து அளவற்ற
பணத்தை சேமித்தான். இவனுக்கு
வயது எண்பது முடிந்தது.
வயது முதிர்ந்ததும் வைராக்யம்
பிறக்கவில்லை. வயது வளர
வளர ஆசையும் வளர்ந்தே
வந்தது.
ஒரு நாள் அமாவாசை.
பித்ருக்களுக்கு சிராத்தம்
செய்ய வேண்டிய நாள்; அல்லது
தர்ப்பணமாவது பித்ருக்களைக்
குறித்து செய்ய வேண்டிய
தினம். அன்று வினதன் சரிவர
ஸ்நானங்கூட செய்யவில்லை.
பிறரிடமிருந்து பணத்தை
அபகரிக்க வேண்டும்; பிறர்
வீட்டில் அமுது செய்ய
வேண்டும் என்ற எண்ணமுடைய
இவன் தன் இல்லத்தில்
சிராத்தம் செய்ய எப்படி
விரும்புவான்? ஓர் அந்தணரையாவது
அழைத்து அன்னமிட்டுத்
தக்ஷிணை கொடுத்தாலன்றோ
சிராத்தம் பூர்த்தியடையும்?
நாஸ்திகனாகையாலே தர்ப்பணம்
செய்வதற்குக்கூட விருப்பம்
இவனுக்கு உண்டாகவில்லை.
பகல் பதினோரு மணி இருக்கும்.
தன் இல்லத்தில் மனைவி,
புத்திரன், பெண் முதலியவர்களுடன்
உண்ண ஆரம்பித்தான். சரியான
சமயம்; ஒரு குரல் கேட்டது.
"அன்னமில்லாமல் வருந்துகிறேன்;
மிகவும் ஏழை; பசியால்
துடிக்கிறேன்; வெளியூரிலிருந்து
வந்தவன்; அதிதி; பசியும்
தாகமும் காதை அடைக்கின்றன.
உயிர் ஆகாயத்தில் பறக்கிறது.
எனக்குக் கொஞ்சம் அன்னமிட
வேண்டும். நீர் நன்கு
கல்வி கற்றவர்; ஒழுக்கத்துடன்
இருப்பவர். ஸன்மார்க்கங்களிலிருந்து
வழுவாதவர்; அக்கினிஹோத்ரம்
ஒளபாஸனம் முதலியவற்றை
செய்பவர். என் கொடும்பசியை
அன்னமிட்டுப் போக்கடிக்க
வேண்டும். உமது அன்னத்தைப்
புசித்து நானும் சுத்தனாவேன்"
என்று சொன்னதை வினதன்
செவியுற்றான்.
"யாரது?
புதிய குரலாக இருக்கிறதே!
பசி காதை அடைக்கிறது
என்கிறாய்; இன்றை தினம்
அமாவாசை. குரலைக் கேட்டதும்
அந்தணன் குரலைப் போல்
தோன்றுகிறது. அமாவாசையன்று
பித்ருக்களைக் குறித்து
ச்ராத்தம் செய்ய வேண்டும்.
அதில் மிகுதியையே புசிக்க
வேண்டும். பிறன் வீட்டு
அன்னத்தைப் புசிக்கவே
கூடாது. தான் ச்ராத்தத்தை
செய்து அதில் மிகுந்ததைச்
சாப்பிடாமல் பிறனுடைய
வீட்டில் சாப்பிட்டால்
நரகத்தில் வீழ்வான் என்றல்லவா
சாஸ்திரம் கூறுகிறது?
நீர் என் வீட்டில் அதிதி
என்று வருகிறீரே. இன்றை
தினம் சிராத்தம் செய்யவில்லையா?
பித்ருத்ரோகி ஆகிவிட்டீர்.
வந்த வழியே திரும்பி
ெச்ல்லும்" என்றான் வினதன்.
அதிதி,
"நான் வழிப்போக்கன்,
ரோகமுள்ளவன், உமக்கு
அதிதியாக வந்தவன். நீரோ
படித்தவர், ஸோமயாஜி
என்று பெயர் பெற்றவர்.
சரியான ஸமயத்தில் வந்த
அதிதியை உபசரிக்க வேண்டும்
என்ற சாஸ்திரத்தை மறந்துவிட்டீரா?
இல்வாழ்க்கையில் உள்ளவன்
தினமும் கடவுள் ஆராதனம்
முடிந்ததும் வெளியில்
வந்து யாராவது அதிதி
வருகிறார்களா என்று பார்த்து,
வந்திருந்தால் முதலில்
அவர்களை உபசரித்துப்
பிறகுதான் சாப்பிட வேண்டும்
அல்லவா? அப்படி இருக்க,
பசியுடன் வந்த என்னை
ஏன் அவமதித்து பேசுகிறீர்?"
என்றான்.
வினதன் மிக்க
கோபமுற்றான். "ஓய் அந்தணரே!
உம்மை பசி வருத்தினால்
பணத்தை கொடுத்து அரிசி
வாங்கி சமைத்து ச்ராத்தம்
செய்து சாப்பிடும். அதிதியை
ஸத்கரிக்க வேண்டும் என்று
தர்மம் சொல்கிற நீர்
அமாவாசையன்று ச்ராத்தம்
செய்யாமல் பிறன் வீட்டில்
சாப்பிட வந்து விட்டீரே.
மிக அழகு! போய் வாரும்"
என்றான்.
அதிதி சொன்னான்
- "ஓய் ஸோமயாஜியே! மிகத்
தாழ்மையுடன் கேட்கிறேன்.
நீர் சொல்கிற தர்ம ஸூக்ஷ்மத்தை
நன்கு உணர்ந்தவன் நான்.
நான் வெளியூரிலிருந்து
இங்கு வந்தவன், தரித்திரன்,
காசு கொடுத்து அரிசி
வாங்க சக்தியற்றவன்.
மனைவியை இழந்தவன். ரோகத்தால்
பீடிக்கப்பட்டவன். பணமின்மையால்
பந்துக்கள்அனைவரும்
என்னை விட்டுவிட்டனர்.
எல்லா வைதிக தர்மங்களையும்
நன்கு உணர்ந்திருந்த
போதிலும் செய்ய சக்தியில்லாமையால்
வருந்துகிறவன். எவனொருவன்
அயல்வீட்டுக்கு வந்து
ச்ராத்தத்தை செய்கிறானோ,
தன் மனைவி இருக்க அந்நியரைக்
கொண்டு ச்ராத்த சமயலை
செய்து வைக்கிறானோ அவன்
செய்யும் ச்ராத்தம் பயனளிக்காது.
பித்ருக்கள் திருப்தியடையமாட்டார்கள்.
அவர்களையே இவன் சாப்பிட்டவனாகிறான்.
கோபமுற்ற பித்ருக்கள்
இவனை, 'தரித்திரனாக வேண்டும்;
பல புதல்வரும் புதல்விகளும்
உண்டாக வேண்டும். அவர்கள்
மூலம் இவனுக்கு பல கஷ்டங்கள்
உண்டாக வேண்டும். உலகிலுள்ள
மக்கள் இவனை வெறுக்க
வேண்டும். பேய் பிசாசுகள்
மூலம் இவனது வம்சம் அழிய
வேண்டும்' என்று சபித்துவிடுகின்றனர்.
பித்ருக்கள் கோபமுற்று
சபித்தால் அப்போதே பலித்துவிடும்.
நெருப்பில் பட்ட பஞ்சு
போல் குலமே கொளுத்திவிடும்.
"பார்வண
ஹோமமில்லாமல் செய்யும்
ச்ராத்தமும், பிறர் வீட்டில்
செய்ததும், அந்நியனை
கொண்டு சமையல் செய்து
நடத்துவதும், வேதம் ஓதாத
அந்தணரை நிமந்தரணத்துக்கு
வைத்து செய்வதும், தக்ஷிணை
இல்லாமல் செய்வதும்,
மிகவும் அவஸரத்துடன்
பரபரப்பாக செய்வதும்,
அகாலத்தில் செய்வதும்,
தேனும் உளுந்தும் இல்லாமல்
செய்வதும், மஹாவிஷ்ணுவான
இறைவனுக்கு நிவேதனம்
இல்லாமல் செய்வதும் பயனற்றவையே.
இம்மாதிரி செய்தால் பித்ருக்கள்
திருப்தியடைய மாட்டார்கள்.
போஜன ஸமயத்தில் யஜமானன்
மெளனமாக இருக்க வேண்டும்.
பல நியமங்களுடனன் செய்தால்தான்
பித்ருக்கள் ஸந்தோஷமடைந்து
அருள் புரிவார்கள். ச்ராத்தம்
செய்ய ஸெளகர்யமில்லாத
ஆபத்துக் காலங்களில்
ஆம ச்ராத்தமாவது செய்ய
வேண்டும். தங்கத்தை கொடுத்தாவது
ச்ராத்தத்தை பூர்த்தி
செய்ய வேண்டும். ஆகையால்
என் கையில் கிடைத்த காசை
ஓர் அந்தணருக்கு கொடுத்துவிட்டு
கங்கையில் ஸ்நானம் செய்வதற்காக
போய் கொண்டிருக்கிறறேன்.
மனைவி இல்லாமல் நிராச்ரமியாக
இருப்பது உபயோகமற்றது.
காசி க்ஷேத்திரத்தில்
சென்று இறந்தவனோ, கங்கையில்
இறந்தவனோ நற்கதி அடைவான்
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
எனவே என் சக்திக்கு தகுந்தபடி
ஹிரண்யத்தினாலே ச்ராத்தத்தை
செய்துவிட்டு, கங்கையில்
விழுந்து இறந்து நற்கதியை
பெறவேண்டுமென்று எண்ணி
போய் கொண்டிருக்கிறேன்.
பசி மிகவும் கொடுமையாக
இருக்கிறது. ஒரு கவளம்
சாப்பாடு கிடைத்தாலும்
போதும். பேசவும் எனக்கு
சக்தி இல்லை. கைகால்கள்
நடுங்குகின்றன" என்று
சொல்லிக் கொண்டே கண்களில்
நீர் ததும்ப நின்றான்.
வினதன்,
"உம்முடைய கஷ்டம் கொடுமையானது.
பிழைக்க வசதியும் உமக்கு
ஒன்றுமில்லை. அதற்கு
நான் என்ன செய்ய முடியும்?
என்னை கேட்டதும் இல்லை
என்று சொன்னபிறகு இங்கு
நின்றுகொண்டு ஏதேதோ
தர்மங்களை சொல்வது நியாயமல்ல.
சீக்கிரத்தில் வெளியில்
செல்லும். இனி மரியாதை
குறைந்துவிடும்" என்று
சொல்லி, வந்த அதிதியை
வெளியில் விரட்டிவிட்டான்.
தர்மபுத்திரனே, இப்படியும்
ஒரு கிருகஸ்தன் இருக்கிறான்
என்பதை கேட்கும்போது
மனம் துடிக்கிறதல்லவா?
எவ்வளவு பொருள் சம்பாதித்தால்
என்ன? பிறருக்கு உபகாரம்
செய்யாதவன் இந்த பொருள்களையெல்லாம்
எடுத்து கொண்டா போகப்
போகிறான்? நம் இல்லத்தை
நாடி ஒரு வித்வான் தமக்கு
உதவி செய்ய வேண்டும்
என்று கேட்டுங்கூட, வீட்டுக்காரன்
" இப்போது செய்ய ஸெளகர்யமில்லை"
என்று சொன்னாலும் செய்கிறேன்
என்று சொல்லி பிறகு
செய்யாமல் போனாலும்
நரகத்தைத்தான் பெறுவான்.
வீட்டுக்காரன் தன் இல்லத்துக்கு
வந்த அதிதியை ஸத்கரிக்காமற்
போனால்தான் கஷ்டப் பட்டு
ஸம்பாதித்த புண்யங்களை
இழந்தவனாகிறான். ச்ரமமின்றியே
வந்த விருந்தாளி அப்போது
அவன் மூலமாக ஓர் உதவியையும்
பெறாவிட்டாலும், அவனது
புண்யமனைத்தையும் எடுத்துக்கொண்டுவிடுகிறான்.
வீட்டுக்காரனும் அதோகதி
அடைவான்.
அதிதி, வினதன்
சொன்ன கொடிய சொற்களை
கேட்டு மிகவும் வருத்தமுற்று,
வேறு வீட்டுக்கு சென்றுவிட்டான்.
வினதன் தன் மனைவி, பெண்,
புதல்வர் முதலியவர்களுடன்
நன்கு புசித்து களித்திருந்தான்.
இவனுடைய பித்ருக்கள்
இதுவரையில் காத்துக்கொண்டிருந்தனர்.
வந்த அதிதி மூலமாகவாவது
திருப்தியடையலாம் என்று
எதிர்பார்த்திருந்தனர்.
பயன் ஏதுமில்லை. பிறகு
சினம் கொண்டு இவனது
இல்லத்திலிருந்து வெளிவந்து,
தாங்க முடியாத சாபங்களை
சபித்தனர். "வந்த அதிதியை
உபசரிக்காததனால் உடனே
இவன் அழிய வேண்டும். இவனுடைய
செல்வமனைத்தும் பாழாக
வேண்டும்" என்று சொல்லிக்
கொண்டே வெறுப்புடன்
சென்றனர்.
பித்ருக்களின்
சாபம் பொய்யாகுமா? நள்ளிரவு.
உடல் அஸெளகரியத்தினால்
வினதன் தண்ணீர் இருக்குமிடம்
சென்றான். பல திருடர்கள்
இவன் இல்லத்தைச் சூழ்ந்தனர்.
செல்வத்தை நிறைய சம்பாதித்து
வீட்டில் வைத்திருக்கிறான்
என்பதை முன்னமே அவர்கள்அறிந்திருந்தனர்.
கத்தி, கோடரி, தடி முதலியவற்றுடன்
அவர்கள், தாழிடாமல் சாத்தியிருந்த
கதவை திறந்து வீட்டுக்குள்
சென்றனர். அங்கே படுத்திருந்த
வினதனுடைய மனைவியையும்
புதல்வனையும் மிரட்டினர்.
அவர்களிடம் சாவியைப்
பெற்றுக்கொண்டு பீரோவைத்
திறந்து, வெள்ளி தங்கம்
பணம் வஸ்திரம் முதலியவற்றை
எடுத்துக் கொண்டனர்.
"திருடர்கள் எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டுவிட்டார்களே!
ஐயோ! என்ன செய்வோம்?"
என்று அவர்கள் உரத்த
குரலில் கூச்சலிட்டனர்.
திருடர்கள், "உங்களை வெறுமனே
விடுவதில்லை" என்று சொல்லி,
வாசற்கதவைத் தாழிட்டு,
ஆங்காங்கு எண்ணெயைக்
கொட்டி நெருப்புக்கு
விருந்தாக்கினர் அவனது
இல்லத்தை. அதிதிக்கு
விருந்தளிக்காத வீடு
நெருப்புக்கு விருந்தாயிற்று.
வெளியில்
சென்ற வினதன் ஏதோ கூச்சல்
கேட்கிறதே என்று பயந்து
ஓடோடி வந்தான். தன் இல்லம்
பஸ்மமாக இருந்ததைக் கண்டான்.
மனைவி மக்களைக் காணவில்லை.
நன்கு கவனித்தான். அவர்கள்
ஒரு பக்கத்தில் கரிக்கட்டையாக
கீழே வீழந்திருப்பதைக்
கண்டான். அழுதான். புரண்டான்.
இனி என்ன செய்வது என்று
ஒன்றும் தெரியாமல் திகைத்தான்.
'மனைவி மக்கள் இறந்தனரே!
கஷ்டப்பட்டு சம்பாதித்த
பொருள்களை இழந்துவிட்டேனே!'
என்று மனவருத்தம் கொண்டான்.
'இனி நாம் இங்கிருப்பது
உசிதமல்ல. வெளியூர் செல்ல
வேண்டும்' என்று நினைத்தான்.
மறுபடியும் பொருள்களை
திரட்ட வேண்டும் என்பதிலேயே
நாட்டம் சென்றது.
வெகு
தூரத்தில் ஓர் அக்ரஹாரம்
இருந்தது. அங்கு ஒரு சிவாலயம்.
ப்ரஹ்மேச்வரம் என்று
அதை வழங்குவர். அது பெரிய
கோயில். அதில் பரமசிவன்
பார்வதி முதலியவர்களுக்கு
தனித் தனியாக கர்ப்பக்ருஹங்கள்
இருந்தன. மூன்று ப்ராகாரங்கள்
அதில் இருந்தன. அங்கு
எப்போதும் பூஜை நடந்துகொண்டே
இருக்கும். சிவனிடத்தில்
பக்தியுள்ள அந்தணர்கள்
ஸர்வ காலமும் துதியும்
பிரதக்ஷிணமும் செய்துகொண்டு
இருப்பர். புராணங்களை
பெரியோர்கள் இரவிலும்
பகலிலும் சொல்லிக் கொண்டிருப்பர்.
புனித ஸ்தலம். அங்கே செல்பவர்களின்
மனம் ஒரு நொடியில் பரிசுத்தமாகிவிடும்.
வேதங்களை ஓதிக்கொண்டு
எப்போதுமே பரமசிவனுக்கு
அபிஷேகம் செய்துகொண்டிருப்பர்
பூஜகர்கள். அவ்வூரிலுள்ள
மஹான்கள் அனைவரும் காலை
பகல் மாலை மூன்று வேளைகளும்
சிவ ஸஹஸ்ரநாமங்களை சொல்லி
அர்ச்சனை செய்வர்.
வினதன்
பொருள் சேமிப்பதில்
விருப்பமுள்ளவனாக, 'எங்கே
செல்லலாம்?' என்று ஆலோசித்தான்.
ப்ரஹ்மேச்வரத்தை இவன்
மனம் நாடியது. 'பல மக்கள்
பழகும் இடம்; ஒன்றுசேரும்
இடம்; இங்கு நம் முயற்சி
வீணாகாது' என்று எண்ணினான்.
ருத்திராக்ஷ மாலையை அணிந்து
கொண்டான். பஸ்மத்தை
உடல் முழுவதும் பூசிக்கொண்டான்.
தலையில் ஒரு ருத்திராக்ஷ
மாலையை சுற்றிக் கொண்டான்.
கமண்டலத்தையும் தடியையும்
கையிலேடுத்தான். மாதம்
கார்த்திகை. வெகு வேகமாக
ப்ரஹ்மேச்வரத்தை நாடினான்.
கோயிலில் ஜனங்கள் திரள்
திரளாக சூழ்ந்திருந்தனர்.
மறு நாள் ஸோமவாரம். அனைவரும்
ஸோமவாரத்தில் பார்வதியையும்
பரமசிவனையும் வணங்கி
வழிபட்டு உபவாசம் இருந்து
இரவிலும் விழித்து சிவநாம
ஸங்கீர்த்தனங்களை செய்து
உய்ய வேண்டும் என்று
எண்ணினர். வினதன், 'இது
சரியான இடம், சரியான ஸமயம்'
என்று எண்ணி, அங்கு ஓர்
இடத்தில், "நம: பார்வதீபதயே.
மஹாதேவ ஹர ஹர" என்று உரத்த
குரலில் கூறிக் கமண்டலத்தை
வைத்து தானும் உட்கார்ந்தான்.
கடவுளை
வணங்கி வந்த ஜனங்கள்,
'யாரோ ஒரு மஹான் இவர்;
ஒரு ஸாது' என்று நினைத்தனர்.
கார்த்திகை ஸோமவாரத்தின்
மகிமையை, சிவபூஜை செய்ய
வந்த பெரியோர் சொல்லிக்
கொண்டிருந்தனர். மறுநாள்
ஸோம வார விரதம் செய்ய
அனைவரும் தொடங்கினர்.
அவரவர் ஸ்நானங்களை முடித்துக்
கொண்டு, பார்வதியையும்
பரமசிவனையும் வணங்கி,
கதை சொல்லும் இடம் அணுகினர்.
கதையில் பக்தி சுவை ததும்பியது.
அனைவரும் ஆனந்த கண்ணீர்
விடலாயினர். வினதன் தன்
மனைவி மக்களையும் இழந்த
செல்வத்தையும் நினைத்து
பக்தி சுவையில் மூழ்கினாற்போல்
கண்ணீர் விட்டான். சில
சமயம் அலோசனையில் ஆழ்ந்தான்.
'இங்கு எப்படி பொருளை
திருடுவது?" என்று ஆலோசித்தான்.
அங்குள்ள அனைவருமே இவனிடத்தில்
முழுமையாக நம்பிக்கை
வைத்தனர். சரியான ஸமயம்
இவனுக்குக் கிட்டியது.
சிவ நாமஸஹஸ்ரத்தை உரத்த
குரலில் கூவிக்கொண்டு
பரமசிவனையும் பார்வதியையும்
வணங்க கர்ப்பக்ருஹத்தில்
நுழைந்தான். அங்கு அர்ச்சகர்
மாத்திரம் அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்.
அனைவரும் கதையில் ஈடுபட்டிருந்தனர்.
அர்ச்சனை முடிந்ததும்
அர்ச்சகரும் வினதனும்
வெளியில் வந்தனர். இவன்
அம்பிகையை வணங்கி பிரதக்ஷிணம்
செய்துகொண்டிருந்தான்.
அர்ச்சகர் சற்று வேறு
வேலையாக வெளியில் சென்றபோது,
ஸமயம் பார்த்துக்கொண்டிருந்த
வினதன் பார்வதியின் ஸந்நிதிக்குள்
நுழைந்து, நவரத்தினங்கள்
இழைத்த அம்பிகையின் இரண்டு
காதணிகளையும் ஒட்டியாணத்தையும்
எடுத்துக்கொண்டான்.
விரைவில் வெளிவந்து பழையபடி
பிரதக்ஷிணம் செய்தான்.
அர்ச்சகர்
மிகவும் வேகமாகவே வேலையை
முடித்துக் கொண்டு ஸந்நிதிக்குள்
நுழைந்தார். காதில் அணியப்
பெற்ற வைர குண்டலம் அபகரிக்கப்படவே
அம்பிகையின் முகம் ஒருவிதமாக
மாறுதலை அடைந்திருந்தது.
திடுக்கிட்டார் அர்ச்சகர்.
"ஐயோ! கொள்ளை போயிற்றே!"
என்று கூவினார். வினதன்
தவிர வேறு ஒருவரும் அங்கு
இல்லாததனால், 'இவன் தான்
இதைத் திருடியிருக்க
வேண்டும்' என்று அவனை
விரட்டத் தொடங்கினார்.
வினதன், 'நம்முடைய திருட்டை
இவர் உணர்ந்துவிட்டாரே'
என்று அறிந்து ஓடலானான்.
அர்ச்சகர் வெகு வேகமாக
ஓடி, மூன்றாவது பிரதக்ஷிணத்தில்
அவனை அணுகி, மிக்க சினத்துடன்
ஒரு தடியால் தலையில்
ஓங்கி அடித்தார். கால்களிலும்
அடித்தார். வினதன், "யாரடா
என்னை அடிப்பது? நான்
என்ன குற்றம் செய்தேன்?'
என்று கோபமுற்று தன்
கையில் இருந்த தடியால்
அர்ச்சகரின் தலையில்
ஓங்கி அடித்தான். தடியடி
தாங்க முடியாமல் 'சிவ
சிவா' என்று சொல்லி தலை
பிளந்தவராக அர்ச்சகர்
விழுந்து இறந்தார். வினதன்
தப்பினோம் என்று எண்ணி,
அடியினால் பொறுக்க முடியாத
வேதனையுடன் பத்தடி நடந்தான்.
கால் தடுமாறி கீழே வீழந்தான்.
சிறிது நேரத்துக்கெல்லாம்
உயிர் உடலை விட்டு பிரிந்தது.
ஜனங்கள் சூழ்ந்தனர்.
அர்ச்சகரும் வினதனும்
இறந்ததும் யமன் தன் தூதர்களை,
"இருவரையும் அழைத்து
கொண்டு வாருங்கள்" என்று
ஏவினான். பயங்கரமான பற்கள்,
கையில் பாசங்கள், முள்முள்ளாக
உள்ள தடிகள் இவற்றுடன்
யமதூதர்கள் இரண்டு பேரையும்
கயிற்றால் கட்டி இழுத்து
சென்றனர். போகும் வழியில்
அவர்கள் படாத அவஸ்தைகளை
பட்டனர். திடீரென்று
யமபடர்களை யாரோ விரட்டினர்.
"யார் நீங்கள்? எங்கள்
யஜமானரான பரம சிவனின்
பக்தர்களான இந்த இருவரை
எங்கு அழைத்து போகிறீர்கள்?
உங்களை சும்மா விடுவதில்லை"
என்று சொல்லி பாசத்திலிருந்து
இவர்களை அவிழ்த்து, அழகிய
விமானத்தில் ஏற்றி சிவலோகத்துக்கு
அழைத்து செல்லலாயினர்.
யமபடர்கள்,
"நீங்கள் யார்? இவர்கள்
செய்த பாவத்துக்கு அளவே
இல்லையே! எங்கள் யஜமானர்
இவர்களை அழைத்துவர கட்டளையிட்டிருக்கிறார்.
பூமியில் நல்ல உடலை கொடுத்து
பிறக்க செய்திருந்தும்
அக்ரமங்களை செய்து வயிறு
நிரப்புவதிலேயே நோக்கமுடையவர்கள்
வசிப்பதற்கன்றோ யமலோகம்
படைக்கப்பட்டிருக்கிறது?"
என்று சொல்லி, சிவகணங்களுடன்
போர் புரிந்தனர். ஆனாலும்
சிவ கணங்களை அவர்கள்
என்ன செய்ய முடியும்?
சிவகணங்களின் அடி பொறுக்க
முடியாமல் தம் பாசங்களையும்
தடிகளையும் அப்படியே
போட்டு ஓடினர். அழுதுகொண்டு
யமனிடம் சென்றனர். "தர்மராஜரே,
கொடுத்த தர்மம் நழுவாது
கார்யங்களை செய்பவரே!
உங்கள் உத்தரவுப்படி
நாங்கள் சென்றோம். ஆனால்
எங்கள் கதி இவ்வாறாயிற்று.
சிவகணங்கள் எங்களை விரட்டினர்.
ப்ரஹ்மேச்வரக் கோயிலின்
அர்ச்சகன் கடவுளுக்காக
கொடுத்த பொருளை ஏமாற்றினவன்.
வினதன் என்னும் அந்தணன்
அம்பிகையின் குண்டலங்களையே
திருடினவன். ஒருவரையோருவர்
கொலை செய்தவர்கள். இவர்களை
சிவகணங்கள் அழைத்து சென்றனர்.
இதன் மர்மம் எங்களுக்கு
புரியவில்லை" என்று சொன்னார்கள்.
தர்மராஜன் சித்திரகுப்தனைக்
கூப்பிட்டு, அவன் மூலம்
விஷயத்தை உணர்ந்து, தூதர்களை
பார்த்து, "உண்மையில்
இருவரும் பாவம் செய்தவர்களே.
இறந்த போது சிவ சிவா
என்று சொல்லி அர்ச்சகர்
உயிரை விட்டான். வினதன்
டாம்பிகமாக இருந்தானாயினும்
செல்வத்தில் ஆசையினாலோ,
மனைவி மக்களை நினைத்தோ
கார்த்திகை ஸோமவாரத்தில்
அந்த கோயிலில் விழித்துக்
கொண்டிருந்தான். ஆகையால்
இருவரும் நற்கதியை அடைந்தனர்.
நீங்கள் இனி, சாகும் தருணத்தில்
விஷ்ணுநாமத்தையோ சிவநாமத்தையோ
சொல்பவர்களை அழைத்து
வர வேண்டாம். ஸாளக்ராமத்தை
தானம் செய்பவரையும்,
உயர்ந்த பாத்திரத்தில்
தக்ஷிணை கொடுப்பவரையும்,
ஒரு நாள் விஷ்ணு பூஜை
செய்பவரையும் உயர்ந்த
புராணங்களை கேட்பவரையும்,
நித்ய கர்மங்களை செய்பவரையும்,
கார்த்திகை மாத ஸோமவாரத்தில்
விரதம் இருப்பவர்களையும்,
விரதம் இருப்பவர் போல்
நடிப்பவர்களையும், துலா
மாதத்தில் காவேரியில்
ஸ்நானம் செய்பவர்களையும்,
விரத தினங்களில் உயர்ந்த
அந்தணர்களுக்கு அன்னம்
தக்ஷிணை முதலியவற்றை
கொடுப்பவர்களையும்
என்னிடம் அழைத்து வர
வேண்டாம். இவர்கள் தாய்
தந்தை அந்தணன் இவர்களை
கொன்றவராயினும், கள்
குடிப்பவராயினும், பிறர்
மனைவியரை காதலிப்பவராயினும்,
பிறர் பொருளை அபகரிப்பவராயினும்,
இன்னும் சில அக்கிரமங்களை
செய்தவராயினும் என் தண்டனைக்கு
உட்படமாட்டார்கள்" என்று
சொல்லி ஸமாதானம் கூறினான்.
"தர்ம
புத்திரனே, கார்த்திகை
மாத ஸோமவாரத்தின் மகிமை
இது" என்று பஞ்ச பாண்டவர்களை
பார்த்து நாரதர் கூறினார்.
*****
துலா
காவேரி மாகாத்மியம் -
11
நாரதர் முனிவர் தர்மபுத்திரரை
பார்த்து "அரசரில் சிறந்தவனே,
தர்மம் நழுவாமல் வேலைகளை
செய்பவனே, இந்த காவேரியின்
மகிமையை மேலும் கூறுகிறேன்.
உன் பிரபிதாமகனான சந்தனு
காவேரியில் ஸ்நானம் செய்து,
அழகிய பெண்ணை மணந்து,
வம்சத்தின் விருத்தியை
அடைந்தான். ஆகையினாலேயே
நீயும் தோன்றினாய்.
பஞ்ச பாண்டவர்களான உங்களுக்கு
இந்த காவேரியின் தொடர்பு
மிக அதிகம் உள்ளது. உங்கள்
வம்சவிருத்திக்கே காரணமானது
காவேரி" என்றார்.
தர்மபுத்திரர்,
"நாரத முனிவரே, நீர் சொல்வது
எங்களுக்கு மிக்க வியப்பை
கொடுக்கிறது. எங்கள்
பிரபிதாமகர் காவேரியில்
ஸ்நானம் செய்ததனால்தான்
அழகிய பெண்ணை மணந்து
கொண்டார், அதன் மூலம்தான்
வம்சம் வளர்ந்தது. நாங்களும்
தோன்றினோம் என்று தேவரீர்
கூறியதை கேட்டதும் மெய்
சிலிர்க்கிறது. இதன்
பெருமையை மேலும் கேட்க
வேண்டும் என்ற அவா எழுகிறது.
இதை விஸ்தாரமாக கிருபை
செய்து எங்களுக்கு தேவரீர்
கூற வேண்டும்" என்றார்.
நாரதர்
கூறுகிறார் - சந்தனு ஓர்
அரசன். அவனுக்கு முதல்
மனைவி கங்கை. அவளுக்கு
எட்டாவது புதல்வனாக தேவவ்ரதன்
பிறந்தான். ஸத்தியவதி
என்பவள் இரண்டாவது மனைவி.
சந்தனுவுக்கு ஸத்தியவதியினிடத்தில்
சித்தி ராங்கதன், விசித்திரவீர்யன்
என்ற இரு புதல்வர்கள்
தோன்றினர். விசித்திர
வீர்யனுக்கு அம்பிகை,
அம்பாலிகை என்ற இரு மனைவியர்.
அம்பிகையினிடத்தில்
திருதராஷ்டிரன் தோன்றினான்.
திருதராஷ்டிரனுடைய புதல்வர்கள்
துரியோதனாதிகள். அம்பாலிகையினிடத்தில்
பாண்டு; அவனுடைய புதல்வர்கள்
நீங்கள் என்பது உங்களுடைய
சரித்திர வரலாறு.
சந்தனு
ஒரு சமயம் வேட்டையாடி
களைப்புற்று ஆற்றங்கரைக்கு
சென்றிருந்தான். அங்கே
உயிரை கவரும்படியான திவ்ய
வாஸனையொன்று வீசியது.
இந்த வாஸனை இதன் காரணத்தை
அறிய அவனை தூண்டிற்று.
அங்குமிங்கும் ஓடி அலைந்தான்.
தேவ கன்னிகையைப் போன்ற
அழகிய வடிவம் கொண்ட
பெண்ணைக் கண்டான். ஒரு
முனிவரிடம் பெற்ற வரத்தின்
மஹிமையினால் இந்த பெண்ணிடமிருந்து
திவ்ய வாஸனை வனம் முழுவதும்
நிரம்பிற்று. இதைக்கொண்டே,
ஸத்தியவதி என்ற அவளுக்கு
யோஜனகந்தி என்ற பெயர்
விளங்கிற்று. அவளைக்
கண்டதும் இவனது வைராக்யம்
பறந்தோடிற்று. அவளை
மனைவியாக கொள்ள வேண்டும்
என்ற அவா வலுத்தது. "பெண்ணே
நீ யார்? உன் தந்தை பெயர்
என்ன? உன் அழகும் உன் மணமும்
என் மனத்தை பறிக்கின்றன",
என்று வெட்கத்தை விட்டு
கூறினான்.
அவள், "நான்
செம்படவ பெண். என் தந்தை
செம்படவ தலைவன். என் தகப்பனை
கொண்டு உங்கள் விருப்பத்தை
பூர்த்தி செய்து கொள்ளுங்கள்",
என்றாள்.
அவள் பேச்சின்
இனிமை அவனது உள்ளத்தை
கவர்ந்தது. பரபரப்புடன்
பெண்ணின் தகப்பனிடம்
சென்று தன் விருப்பத்தை
வெளியிட்டான். செம்படவன்
மிக்க புத்திசாலி. சந்தனுவை
பார்த்து பொருள் பொதிந்த
வார்த்தைகளை பேச தொடங்கினான்.
"மஹாராஜனே, பெண்ணாக பிறந்த
இவளை எவனாயினும் ஒருவனுக்கு
கொடுத்தே தீர வேண்டும்.
நீயும் இவளுக்கு தகுந்த
வரன். இதில் சந்தேகமே
இல்லை. ஆனால் நீ எனக்கு
ஒரு சத்தியம் செய்து
கொடுத்தால் இவளை நீ
அழைத்து செல்லலாம்" என்றான்.
சந்தனு
"நீ கேட்பது கொடுக்க
கூடியதாக இருந்தால் உன்
சொற்படி செய்கிறேன்."
என்றான்.
செம்படவன்
"நான் உலகத்தில் நடைபெறாததை
கேட்கவில்லை. என் பெண்ணினிடத்தில்
பிறக்கும் புதல்வனுக்கு
உனக்கு பிறகு பட்டாபிஷேகம்
செய்துவைக்க வேண்டும்.
இதுதான் என் விருப்பம்"
என்றான்.
இதை கேட்டதும்
சந்தனு திடுக்கிட்டான்.
கவலை கொண்டான் 'கங்கையினிடத்தில்
எனக்கு பிறந்த தேவவ்ரதனை
விட்டு ஒரு செம்படவ பெண்ணுக்கு
பிறக்கும் புதல்வனுக்கா
அபிஷேகம் செய்து வைப்பது?
இந்த நிபந்தனை ந்யாயமன்று.
சந்த்ர வம்சத்துக்கு
இழிவை தரும்" என்று நினைத்து
அந்த பெண்ணினிடத்தில்
விருப்பமுள்ளவனாக இருந்தும்
அரண்மனைக்கு திரும்பினான்.
இரவு பகல் தூங்கவில்லை.
ஆஹாரம் புசிக்கவில்லை.
நீண்ட கவலையில் ஆழ்ந்தான்.
படுத்துக் கொண்டு புரள்வான்.
கண்களில் நீரைப் பெருக்குவான்.
யோஜனகந்தியினிடத்திலேயே
அவன் மனம் ஓடியது. ராஜ்யத்தையும்
சரிவரக் கவனிக்க சக்தியற்றவனானான்.
வரும் ஸாதுக்களை பூஜிப்பதுமில்லை.
அவர்களுடன் பேசுவதுமில்லை.
இப்படி சில நாட்கள் கழிந்தன.
ஒரு
நாள் தெளம்யர் என்ற ரிஷி
சந்தனுவை பார்க்க வந்தார்.
பூஜிப்பதற்கு, உரிய அவரை
பூஜிக்காமல் அரசன் அரசனின்
நிலையை தமது யோகமஹிமையினால்
கண்டறிந்த அவர், "உன் இல்லத்தை
அடைந்த என்னை பார்த்தும்
பாராதவன்போல் ஏன் இருக்கிறாய்?
உன் உள்ளத்தில் உள்ள
கருத்தை நான் நன்கறிவேன்"
என்று கூறி தமது கமண்டலத்தில்
இருந்த ஜலத்தை எடுத்து
அவன் சிரஸ்ஸில் ப்ரோக்ஷித்தார்.
திடீரென்று தூக்கத்திலிருந்து
எழுந்தவன்போல் உணர்வு
ஏற்பட்டு அவன் ஸாஷ்டாங்கமாக
அவரை வணங்கினான். பிறகு
பூஜைகளை செய்ய தொடங்கினான்.
தெளம்யர் "அரசே, நீ செம்படவ
பெண்ணினிடத்தில் மோகம்
கொண்டு உன் அறிவை இழந்திருக்கிறாய்.
அவளை பெற ஒரு வழி உண்டு.
அதை செய்தால் அவளை பெறலாம்"
என்றார்.
"அந்தணரே, மூன்று
காலங்களிலும் நடக்கும்
விஷயங்களை அறிய வல்லமை
பெற்றவரே, உம்மால் செய்ய
முடியாதது ஏதுமில்லை.
என் உள்ளத்தில் உள்ளதை
உணர்ந்தது போல் அந்த
விருப்பத்தை நடத்த விரகையும்
அறிந்த தேவரீரே கூறவேண்டும்"
என்றான்.
தெளம்யர், "அரசனே,
துலா மாஸத்தில் காவேரியில்
ஸ்நானம் செய். அங்குள்ள
அரங்கநாதனை வணங்கி வழிபடு.
அரங்கன் விஷயமான ஸ்துதிகளை
கொண்டு அரங்கநாதனை தொழு.
நூற்றெட்டு நாமங்களை
சொல்லி அர்ச்சனை செய்.
கங்கையில் புனிதமான காவேரிக்கு
நிகரானது எதுவுமில்லை.
அரங்கநாதனின் நூற்றெட்டு
நாமங்களுக்கு ஸமமான நாமம்
எதுவுமே இல்லை" என்று
சொல்லி, அரங்கநாதனுடைய
நூற்றெட்டு நாமங்களையும்
உபதேசம் செய்தார். காவேரி
தீர்த்தத்தை கொண்டு
ஆசமனம்செய்தால் அது நெஞ்சில்
பட்டவுடனே ஸர்வ பாபங்களும்
விலகுகின்றன. காவேரியில்
ஸ்நானம்செய்து, அதன்
பெருமையை பெரியோர்மூலம்
கேட்டு தெரிந்துகொள்.
பசு, அன்னம், வஸ்திரம்,
தானியம், பொருள், மனை
இவற்றை கொடு. துவாதசியில்
காவேரி கரையில் பாயஸ
அன்னத்தை அந்தணர்களுக்கு
கொடு. ஸ்ரீரங்கநாதன்
நீ விரும்பிய பலனை அளிப்பான்"
என்று கூறி, தெளம்யர்
தமது ஆசரமத்துக்கு சென்றார்.
சந்தனு
தெளம்யர் சொற்படி தன்
புதல்வனான தேவவ்ரதனிடத்திலும்,
மந்திரியினிடத்திலும்
ராஜ்யத்தை ஒப்படைத்து,
தன் பரிவாரத்துடன் காவேரிக்
கரையை அடைந்து ஸ்நானம்
முதலியவற்றை செய்தான்.
ஆயிரக் கணக்கான யானை,
குதிரைகளை தானம் செய்தான்.
பிராம்மணர்களுக்கு பல
தானங்களை செய்தான். ஒரு
மண்டலம் நியமத்துடன்
இருந்து தன் விரதத்தை
பூர்த்தி செய்து கொண்டான்.
பிறகு மாஹிஷ்மதி என்னும்
நகரை அடைந்து அங்குள்ள
மிலேச்சர்களை வென்றபின்
அஸ்தினாபுரத்தை அடைந்தான்.
ஆயினும் செம்படவ பெண்ணின்
நினைவு அதிகரித்துக்
கொண்டே இருந்தபடியால்
உடல் மெலிந்து காணப்பட்டான்.
ஒரு
நாள் தேவவ்ரதன் தகப்பனது
நிலையைப் பார்த்து, "தந்தையே,
நீர் ஏன் துக்கத்தில்
மூழ்கியிருக்கிறீர்?
எல்லா விதமான ஸுகமும்
இருக்க துக்கத்துக்கு
காரணம் என்ன?" என்று கேட்டான்.
அரசனின் உடகருத்தை அறிவாளியான
தேவவ்ரதன் ஒருவாறாக தெரிந்துகொண்டு
யமுனை கரைக்கு சென்று
செம்படவராஜனிடம் அவன்
மகள் ஸத்தியவதியை தன்
தகப்பனாருக்கு மணம் செய்விக்க
கேட்டான்.
செம்படவன்
"தேவவ்ரதனே, என் மகள் ராஜமஹிஷியாக
ஆவதற்கு தகுந்தவள். இவளுக்கு
பிறக்கும் குமாரன் அரசனாக
வேண்டும் என்பது என்
எண்ணம். சந்தனுவுக்கு
பிறகு உமக்கு பட்டாபிஷேகம்
ஆவதாக இருக்கிறது. இதுதான்
என் பெண்ணை உம்முடைய
தகப்பனுக்கு கொடுக்க
தடையாக உள்ளது" என்றான்.
தேவவ்ரதன்,
"உன் பெண்ணுக்கு பிறக்கும்
மகனே ராஜாவாக இருப்பான்.
நான் பட்டாபிஷேகம் செய்து
கொள்வதில்லை. இது ஸத்தியம்"
என்று கூறினான்.
செம்படவன்,
"தகப்பனிடத்தில் பக்தியுள்ள
புதல்வரே, நீர் பெருவீரர்,
பெரும் தியாகி; ஆனால்
நான் ஒன்று சொல்கிறேன்;
அதில் மன வருத்தமில்லாமல்
பதில் கூற வேண்டும். உமது
வாக்கில் எனக்கு சந்தேகமல்லை.
ஆனால் உமக்கு உண்டாகும்
ஸந்ததி உம்மை போல் பெருவீரனாக
திகழ்வான். அவனுக்கும்
என் பெண்ணின் புதல்வனுக்கும்
ஒருவித போராட்டம் ஏற்படுமானால்
என்ன செய்வது என்றுதான்
ஐயப்படுகிறேன்" என்றான்.
இதைக்
கேட்டதும் தேவவ்ரதன்
தன் தந்தையின் விருப்பத்தை
நிறைவேற்ற வேண்டும் என்ற
கருத்துடன், "நான் ஆயுள்
முழுவதும் ப்ரஹ்மசர்ய
வ்ரதம் பூண்டே நிற்பேன்.
என் உயிர் இந்த உடலில்
இருக்கும் வரையில் நான்
புத்ரோத் பத்தி செய்வதில்லை.
இது உண்மை" என்று சேம்படவனின்
கையை தட்டி ப்ரதிஜ்ஞை
செய்தான். ஆகாயத்திலுள்ள
தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.
"பீஷ்மன், பீஷ்மன்" என்று
அசரீரி கோஷம் உண்டாயிற்று.
செம்படவன்
தன் பெண்ணான ஸத்தியவதி
(யோஜனகந்தி) யைப் பீஷ்மரிடம்
ஒப்படைத்தான். அன்று
முதலாக தேவவ்ரதனுக்கு
பீஷ்மர் என்ற திருநாமம்
உண்டாயிற்று. பீஷ்மர்
யோஜனகந்தியை தம் தகப்பனிடம்
ஒப்படைத்து அவனை மகிழ்வித்தார்.
சந்தனு தன் புதல்வரான
பீஷ்மருடைய உடலை தடவி
கொடுத்து "உனக்கு ஸ்வச்சந்த
மரணம் (விரும்பியபோது
மரணம்) உண்டாக வேண்டும்.
எல்லா உலகங்களையும் அடைவாய்"
என்று ஆசீர்வதித்தான்.
ஸத்தியவதியினிடத்தில்
அவனுக்கு சித்திராங்கதன்,
விசித்திர வீரியன் என்ற
இரு புதல்வர்கள் பிறந்தனர்.
காவேரியில் நியமத்துடன்
ஸ்நானம் முதலியவற்றை
செய்தபடியால் சந்தனு
யோஜனகந்தியை மணந்துகொண்டான்;
வம்சவ்ருத்தியும் உண்டாயிற்று.
காவேரியில் துலா மாதத்தில்
ஸ்நானம் செய்து இந்த
கதையை கேட்பவர்கள் ஸந்தானத்தையும்
ஸம்பத்தையும் ஆயுளையும்
பெறுவார்கள்.
முப்பத்திரண்டு
வருஷகாலம் எவனொருவன்
அக்கினி பரிசர்யை செய்யவில்லையோ,
ஜபதபங்களை செய்யவில்லையோ,
அவனுக்கு 24 லட்சம் காயத்திரி
ஜபம் ப்ராயஸ்சித்தமாக
பிதிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர வேறு ப்ராயஸ்சித்தம்
கிடையாது. ஆனால் காவேரியில்
துலா மாதத்தில் ஸ்நானம்
செய்வதனால் பாவங்களை
வெல்லுவான்; ஹரியினிடத்தில்
பக்தியுள்ளவனாக ஆவான்.
தினந்தோறும்
மத்தியான்ன காலத்திலும்
ஸ்நானம் செய்துதான் கடவுளை
ஆராதிக்க வேண்டும். வைச்வதேவத்தையும்
செய்ய வேண்டும். மாத்யாஹ்நிக
ஸ்நானம் செய்யாமல் கடவுள்
ஆராதனம் முதலியவற்றை
செய்பவன் குல்மவியாதியால்
பீடிக்கப்படுவான். அவனும்
காவேரியில் ஸ்நானம் செய்து
பிணியற்றவனாக ஆவான்.