நாரதர் சொல்கிறார்
-
கார்த்திகை மாதத்தின்
பெருமையை ஒருவராலும்
சொல்ல முடியாது. நான்கு
முகம் படைத்த பிரம்மா
ஒருவர்தாம் இதன் மகிமையை
அறிவார்; சொல்வார். ஒரு
ஸரஸ்ஸின் கரையிலுள்ள
நெல்லி மரத்தின் அடியிலுள்ள
ஜலத்தில் ஒரு பாம்பால்
பீடிக்கப்பட்ட தவளை நல்லுபதேசங்களைச்
செய்து அந்த பாம்புக்கு
நற்கதியை கொடுத்தது.
இது கார்த்திகை மாதத்தில்
நடந்த விஷயம்.
தர்மபுத்திரர்,
"அறிவில்லாத தவளை ஸர்ப்பத்துக்கு
எப்படி உபதேசம் செய்தது?
இரண்டும் தாழ்ந்த இனத்தில்
பிறந்தவை, கார்த்திகையில்
புண்ணியநதியின் நீரில்
ஸம்பந்தப் பட்டதனால்
அந்தப் பாம்பு உயர்ந்த
கர்மங்களால் அடையப்படும்
ஸ்வர்க்கத்தை அடைந்ததென்றால்
மிக்க வியப்பு உண்டாகிறது.
இந்த விருத்தாந்தத்தை
மேன்மேலும் கேட்க வேண்டுமென்று
என் மனம் தூண்டுகிறது.
பல கல்விகளை கற்றும்,
யாகம் முதலிய வேள்விகளை
மிக்க ஆயாஸத்துடன் செய்தும்
பெற வேண்டிய உயர்ந்த
உலகம் இந்தப் பாம்புக்கு
ஆயாஸமின்றியே கிடைத்ததென்றால்
இதை யார் நம்புவார்கள்?
இவ்விஷயம் என் மனத்தில்
நன்கு பதியும்படியாக
தேவரீரே கூறவேண்டும்.
எங்களுக்கு உண்டான அறிவின்மையைப்
போக்கும் முனிவர் நீரே;
எல்லா சாஸ்த்ரங்களின்
ஸாரங்களை அறிந்தவரும்
நீரே; உயர்ந்த ஸத்புருஷரும்
நீரே. முற்பிறவியில்
நாங்கள் செய்த தவம், தியானம்,
புண்ய தீர்த்த ஸ்நானம்,
ஸத்பாத்ரங்களில் கொடுத்தல்
முதலிய நற்கர்மங்களினால்
தேவரீருடைய உபதேசத்தைப்
பெற்றோம்" என்றார்.
நாரதர்
கூறலானார் - தர்மபுத்திரனே,
உன்னைவிட அதிர்ஷ்டசாலி
ஒருவரும் இல்லை. உன் தந்தைபோல்
நீயும் ஸத்கதைகளில் ஈடுபடுகிறாய்.
பாம்பினால் பீடிக்கப்பட்ட
தவளை, கார்த்திகையில்
காவேரியில் ஸ்நானம் செய்ததனால்
உயர்ந்த உலகத்தை அடைந்தது.
மறுபடியும் பூமியில்
அந்தணனாகப் பிறந்தது.
பிறகு வைஷ்ணவனாக இருந்து
விஷ்ணுவை அடைந்தது. இந்த
வரலாற்றை விஸ்தாரமாகக்
கூறுகிறேன். கேள்.
விராட
தேசத்தில் வாஸ்துஹோமம்
என்ற ஓர் உயர்ந்த அக்ரகாரம்
இருந்தது. வேதம் பிரபந்தம்
முதலியவற்றை அப்யஸித்த
அந்தணர்களாலும் வைஷ்ணவர்களாலும்
சூழப்பெற்றது. எங்கும்
யாகம் ஹோமம் முதலிய
நற்காரியங்களால் விளங்கப்
பெற்றது. அங்குள்ளவர்கள்
அனைவரும் தீய குணமற்றவர்கள்.
பொறாமை பேராசை முதலிய
துர்க்குணங்கள் நடமாடாத
ஊர் அது. எங்கும் இதிகாசங்களையும்
புராணங்களையும் சொல்லிக்
கொண்டே இருப்பார்கள்
அவ்வூரிலுள்ள மகான்கள்.
இந்த அக்ரகாரத்துக்கு
நிகரான அக்ரகாரம் எதுவுமே
கிடையாது. சில ஊர்களில்
ஒருவருக்கு ஸுகம் ஏற்பட்டால்
மற்றவர், 'ஐயோ! அவர் மேன்மை
அடைந்துவிட்டாரே!' என்று
கஷ்டப்படுவர்; ஒருவர்
கஷ்டமடைந்தால் அதைக்
கண்டு மற்றவர் ஸந்தோஷமடைவர்.
யஜமானரும் நற்காரியங்கள்
செய்பவரை வெறுப்பார்;
கோயில் குளங்களை அழிக்கக்
கருதுவர்; கடவுளின் பூஜையைச்
சரிவர நடத்தாமலிருக்க
ஏற்பாடு செய்வர். கோயில்களை
நாடகசாலை முதலியவையாகச்
செய்ய நினைப்பர். இப்படி
அளவில்லாத துர்மார்க்கத்தில்
பிரவேசிப்பார்கள். வாஸ்துஹோமம்
என்ற அக்ரகாரமோ இவற்றுக்கு
முரண்பாடானது.
ஒரு ஸமயம்
கார்த்திகை மாதத்தில்,
ஸூர்யோதய காலத்தில்,
அங்குள்ள புண்ய ஸரஸ்ஸில்
ஸ்நானம் செய்வதற்கு அனைவரும்
சென்றனர். சிறியவர் தொடக்கமாகப்
பெரியவர்வரை ஸரஸ்ஸில்
ஸ்நானம் செய்து, 'கார்த்திகை
மாதத்திய ஸ்நானத்தின்
மகிமையைச் சொல்லவேண்டும்'
என்று ஒரு பெளராணிகரை
வேண்டிக் கொண்டனர்.
ஒரு நெல்லிமரத்தின் நிழலில்
ஸரஸ்ஸின் கரையில் மகா
விஷ்ணுவை ஆராதித்துப்
புராணம் ஆரம்பமாயிற்று.
தர்மபுத்திரனே,
இங்கு ஓர் ஆச்சரியகரமான
நிகழ்ச்சி நடைபெற்றது.
புராணம் ஆரம்பித்த ஸமயம்,
ஒரு தவளை கரையின் மேல்
இருந்தது. இதை ஒரு காக்கை
பார்த்துத் துரத்தியது.
தன்னைத் துரத்திய காக்கையைக்
கண்டு பயந்த தவளை வேகமாகத்
தத்தித் தத்திப் புராணம்
சொல்பவரின் காலில் விழுந்தது.
பிறகு ஒரே தாவாகத் தண்ணீரை
அடைந்துவிட்டது. காக்கைக்கு
பயந்து தவளை தண்ணீரை
அடைந்தது. அங்கு ஒரு பாம்பு
அதைக் கவ்விக் கொண்டது.
தவளை என்ன செய்யும்? பாம்பின்
விஷப்பற்கள் பட்டு அது
கண்ணீர் விட்டு அழலாயிற்று.
பாம்பின் வாயில் அகப்பட்டுக்
கொண்ட தவளை மெதுவாகப்
பாம்பைப் பார்த்து பேசத்
தொடங்கியது -
"தாழ்ந்த
பிறவியில் பிறந்த பாம்மே,
உன் பிறவியின் வரலாற்றை
அறியாமல், 'விஷபலம் நமக்கு
அதிகமாக இருக்கிறது'
என்று மதம் கொண்டு, பலமில்லாத
என்னை ஏன் கொல்ல நினைக்கிறாய்?
உன் வயிறு நிரம்புவதையே
முக்கியமாக நினைக்கிறாய்.
ஸாதுவான என் கஷ்டத்தை
அறிவாய். எவனொருவன்
பிறனுடைய கஷ்டத்தை கவனிக்காமல்
தன் ஸுகத்தையே விரும்புகிறானோ
அவனைவிட மூடன் ஒருவனும்
இல்லை. அவனவன் செய்த புண்ணிய
பாவங்களை இட்டு இறைவன்
உடலைக் கொடுக்கிறான்.
நாம் செய்த பாவத்தின்
பயனாக இந்த ஹீன ஜன்மம்
நமக்குக் கிட்டியது.
நாம் ஒருவருக்கும் தீமைகளைச்
செய்யாமலும், பிறருக்கு
இயன்றவரை நன்மைகளைச்
செய்தும் இனியாவது நற்பிறவியை
அடைய வேண்டும். தானாகவே
கிடைக்கும் ஆஹாரங்களைக்
கொண்டு வயிறு நிரம்பினால்
போதும் என்று நினைக்க
வேண்டும். நாம் இன்பத்துடன்
இருக்கக் கருதி, பிறரிடம்
உள்ள வஸ்துக்களை கொள்ளை
கொண்டாலோ, பிறரைக்
கொன்றாலோ இதை இறைவன்
பொறுக்க மாட்டான். அளவற்ற
நரகங்களில் தள்ளி யமன்
ஹிம்ஸிப்பான்.
"இவ்வூரிலுள்ளவர்கள்
ஒவ்வொருவரும் எவ்வளவு
ஒற்றுமையோடு இருக்கின்றனர்!
பிறருக்கு துன்பத்தையே
உண்டுபண்ணுவதில்லை,.
ஒருவருக்கு ஒருவர் நன்மையையே
செய்வதில் சிந்தை உடையவர்.
தங்களுக்கு பல கஷ்டங்கள்
வந்தாலும் அவற்றை பொறுத்துக்
கொண்டு பிறருக்கு உபகாரம்
செய்வதில் முயற்சி எடுத்துக்
கொள்கின்றனர். இவர்களது
சேர்க்கையினாலேயும்
உனக்கு நல்லுறுவு ஏன்
உண்டாகவில்லை?
"காடுகளில்
முனிவர்கள் வசிக்கும்
ஆசிரமங்கள் இருக்கும்.
அங்குள்ள ஒரு பெரிய தொட்டியில்
ஆடு மாடு சிங்கம் புலி
முதலியன ஒரே சமயத்தில்
தண்ணீர் குடிக்குமாம்.
ஒன்றுக்கு ஒன்று பகைமையைக்
காட்டுவதில்லையாம். பசுவின்
கன்று, தன் தாய் புல் மேய
வெளியில் சென்றிருக்கும்போது
புலியினுடைய மடியிலிருந்து
பாலைப் பருகுமாம். யானைக்குட்டி
சிங்கத்தின் வாயிலிருந்து
தாமரைத் தண்டுகளைத் தன்
துதிக்கையால் பிடித்து
இழுத்துக் கொள்ளுமாம்.
இப்படி விரோதமின்றியே
ஒவ்வொரு பிராணியும்
இருப்பதைக் கண்டால் மனம்
எவ்வளவு ஸந்தோஷமடைகிறது!
நீ இங்கே புராணம் சொல்வதைக்
கேட்டும், இவர்களருகில்
இருந்தும் நல்ல அறிவை
ஏன் பெறவில்லை? இப்படித்
தீய செயல்களைக் கண்ட
யமன், 'நமது ராஜ்யம் அழியாது;
மேமேலும் ஆள்கள் கிடைக்கின்றனர்'
என்று சிரிக்கிறான்.
எனவே இனியாவது நற்செயல்களைச்
செய்ய விருப்பம் கொள்.
எல்லாவிதமான ஆபாஸங்களோடும்
கூடிய இந்த உடலைப் பிறரை
ஹிம்ஸித்தாவது காக்க
வேண்டும் என்ற ஆசை ஏன்
உனக்கு?" என்று தவளை கூறியது.
இதைக்
கேட்டதும் பாம்பு, "அடடா!
என்ன ஆச்சரியம்! எனக்கு
உபதேசம் செய்ய வந்துவிட்டாய்.
உன் முற்பிறவி என்ன என்பதை
நீ உணர்ந்தாயா? என்னைக்
காட்டிலும் உனக்கு அதிகப்
பலம் இல்லாததனால் இப்படிக்
கூறுகிறாய். உனக்கு கீழ்ப்பட்ட
ஜந்துக்களை நீ ஹிம்ஸிக்கவில்லையா?
என்னைப் போல் நீயும்
தாழ்ந்த பிறவியைத்தான்
எடுத்திருக்கிறாய். பரோபதேசத்தில்
மாத்திரம் உன் ஸாமர்த்தியம்
விஞ்சியிருக்கிறது" என்றது.
"பாம்மே,
நீ சொல்வது வாஸ்தவந்தான்.
எல்லாத் தவளைகளையும்
போல் நீ என்னை நினைக்க
வேண்டாம். நான் நம் இருவருடைய
முற்விறவி வரலாற்றை நன்கு
உணர்வேன். உன்னிடமிருந்து
தப்பித்துக் கொள்வதற்காக
இம்மாதிரி சொல்கிறேன்
என்ற நினைக்க வேண்டாம்.
நான் உண்மையில் புண்ணிய
விசேஷத்தால் ஜாதிஸ்மரனாக
உள்ளேன். நீ என்னை வாயிலிருந்து
வெளியில் வரும்படி விட்டால்
எல்லாவற்றையும் கூறுகிறேன்"
என்றது தவளை.
இதைக் கேட்ட
பாம்புக்கு ஒரு புறம்
பயமும் மறுபுறம் ஆச்சரியமும்
உண்டாயின. அது வாயைத்
திறந்தது; வெளியில் வந்த
தவளையை நோக்கி, :"என் குற்றத்தை
மன்னித்துக் கொள்ள வேண்டும்"
என்று வேண்டிக் கொண்டது.
"நான் பாப புண்ணியங்களை
அறியேன். என் வயிறு நிரம்பினால்
போதும் என்று எண்ணி
இவ்வேலையைச் செயதுவிட்டேன்.
நீ புண்ணியம் செய்தவன்.
முன்பிறவி விருத்தாந்தங்களை
நன்கு உணர்வாய். நீ முற்பிறவியில்
எப்படி இருந்தாய்? தவளையுடல்
உனக்கு ஏன் உண்டாயிற்று?
எல்லாத்தவளைகளையும்
போல அல்லாமல் உனக்கு
'அறிவு வந்ததற்கு நீ என்ன
புண்ணியம் செய்தாய்?
நான் யார்? என் வரலாறு
என்ன? எல்லாவற்றையும்
எனக்கு கூற வேண்டும்"
என்று பாம்பு கேட்டுக்
கொண்டது.
தவளை கூறுகிறது
- நான் முன்பு பிராம்மணனாக
காஞ்சீபுரத்தில் பிறந்தவன்;
நான்கு வேதங்களையும்
ஓதினவன்; தர்ம சாஸ்திரங்களை
நன்கறிந்தவன்; நம்மைப்
பலர் புகழ வேண்டும் என்ற
எண்ணம் கொண்டவன்; தீய
செயல்களைச் செய்யும்
துஷ்டர்களோடு ஸஹவாஸம்
செயதவன்; வெளியில் பல
இடங்களில் புராண உபந்யாஸங்களைச்
செய்து நிரம்ப பணத்தை
சம்பாதித்தவன். உபந்யாஸம்
செய்ய கூப்பிடுகிறவர்களிடம்
'இவ்வளவு கொடுத்தால்தான்
வருவேன்' என்று சொல்லி,
அவர்களிடம் பணத்தை வாங்கினவன்.
'அழகிய சாஸ்த்ரார்த்தங்களைக்
கூறினால் ஜனங்கள் அதிகம்
வரமாட்டார்கள்' என்று
எண்ணி, வேடிக்கையான விஷயங்களையே
எடுத்துச் சொல்லி ஜனங்களை
என் வசமாக்கினவன். இதைக்
கண்டு பாமரர்கள் அதிகமானபடியால்
என்னையே உபந்யாஸங்களுக்குக்
கூப்பிடுவார்கள். குறிப்பிட்ட
தொகையை அவர்கள் கொடுக்காவிட்டால்
கோபமடைவேன்.
அத்துடன்
ச்ராத்தம் முதலிய ஸத்காரியங்களைச்
செய்து வைத்து அதன் மூலமாகவும்
பணத்தைச் சம்பாதிப்பேன்.
நான் படித்தவன், உபாத்தியாயன்,
உபந்யாஸகன் என்று எண்ணி,
என்னையே ச்ராத்தத்தில்
போக்தாவாகப் பிரார்த்திப்பார்கள்
ஜனங்கள். அப்பொழுது
நான் உபாத்தியாயன் என்பதனால்,
என்னிடத்தில் கெளரவத்தை
வைத்து, எல்லா தக்ஷிணையையும்
என்னிடம் கொடுத்து,
"இதைச் சரியாக் பங்கு
போட்டுக் கொடுங்கள்"
என்று சொல்வார்கள்.
நான் அதைப் பெற்றுக்
கொண்டு, என்னுடன் சாப்பிட்டவர்களுக்கு
சொற்ப தக்ஷிணையைக் கொடுத்து,
மீதியை நான் எடுத்துக்
கொள்வேன். இம்மாதிரி
உபந்யாஸங்களிலும் ச்ராத்தங்களிலும்
வெளி வீடுகளிலேயே சாப்பிட்டுப்
பொழுது போக்கியவன்
நான். பிறருக்கு உபதேசம்
செய்வதையே தொழிலாகக்
கொண்டவன். எள்ளளவும்
நற்காரியங்களை எனக்காக
செய்தவனல்லேன். ஸபைகளில்
வாசாலகனாக இருந்து, அங்கே
கிடைத்த எல்லாப் பொருள்களையும்
நானே எடுத்துக் கொள்வேன்.
அங்கு வந்துள்ள உண்மையான
வித்வான்களுக்கோ, வேதாத்தியயனம்
பண்ணின மகான்களுக்கோ
ஒரு சல்லிக் காசுகூடக்
கொடுக்க மாட்டேன்.
ஒரு
ஸமயம் காஞ்சீபுரத்துக்கு
அருகிலுள்ள பாலாற்றில்
மாக மாதத்தில் ஸ்நாநம்
செய்ய வேண்டும் என்று
எண்ணி பிராம்மணர் முதலிய
நான்கு வர்ணத்தினரும்
கூடினர். அங்கே பெண்களும்
ஆவலுடன் சேர்ந்தனர்.
அப்போது என்னையும் அங்கழைத்து,
" மாக மாதத்தின் பெருமையைப்
படித்துக் கூறவேண்டும்"
என்று வேண்டிக் கொண்டார்கள்.
என்னைவிட நன்றாக சொல்பவர்கள்
யாரும் இல்லை என்றும்,
என்னையே நிர்ப்பந்தம்
செய்வார்கள் என்றும்
எண்ணி, அதிக பணத் தொகையை
அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள் அப்படியே கொடுப்பதாக
ஒப்புக் கொண்டு அழைத்தனர்.
ஒரு மாத காலம் மாக மாஹாத்ம்யம்
நடந்தது. இறுதியில் புஷ்பங்களால்
அலங்கரித்த பல்லக்கில்,
நானா வர்ணங்களோடும்
மணத்தோடும் கூடிய புஷ்பங்களால்
தலையிலிருந்து கால்வரை
அலங்கரித்து என்னை உட்கார
வைத்தனர். நானாவித வாத்தியங்களுடன்
என்னைப் பல்லக்குடன்
பட்டணத்தில் அழைத்து
சென்றனர். தனம, ரத்தினம்,
வெள்ளி பாத்திரங்கள்,
வஸ்திரங்கள் முதலிய உயர்ந்த
வஸ்துக்களை எனக்கு ஸம்பாவனை
செய்தனர்.
மறுதினம்
என் இல்லத்தில் ஆயிரம்
அந்தணர்களுக்கு அன்னமிட
வேண்டும் என்று எண்ணி
அனைவரும் அதற்கு தகுந்த
பொருள்களை முந்திய நாள்
இரவே என் இல்லத்தில்
கொண்டு வந்து சேர்த்தனர்.
இவற்றை கண்ட எனக்கு அதிக
பேராசை உண்டாயிற்று.
முன்பு ஒரு தினமாவது
கடவுளையும் அதிதிகளையும்
ஆராதித்திருந்தால் இப்பொழுது
பிறர் கொடுக்கும் பொருள்களைக்
கொண்டாவது அவர்களை ஆராதிக்க
மனம்இடம் கொடுக்கும்.
அதுவும் இல்லை. ஒரு நாளும்
நான் கடவுளை ஆராதித்ததில்லை;
அதிதிகளைப் பூஜித்ததே
இல்லை. வைச்வதேவத்துக்கு
தர்ப்பணம் செய்துவிட்டேன்.
எனக்கு கிடைக்கும் துளஸி,
புஷ்பம் முதலியவற்றை
விற்று பணத்தை சேமிப்பேன்.
வேதம் ஓதினவர்களிடத்திலும்,
சாஸ்த்ரங்களை பயின்றவர்களிடத்திலும்
நான் வெறுப்புக் கொண்டவன்.
எனவே எனக்கு கொடுத்த
ஸம்பாவனையையும், மற்றுமுள்ள
பொருள்களையும் உயர்ந்த
வித்வான்களுக்கு கொடுக்க
மனம் இல்லாதவனாக, ஏதோ
ஒரு காரணத்தைச் சொல்லி,
மறுநாள் அன்னதானத்தை
தடுத்துவிட்டேன்.
மறு
தினம் என் மைத்துனன்,
மாமனார், பெண், பிள்ளை
மற்றும் உள்ள கிட்டிய
பந்துக்களை அழைத்து,
விசேஷமாக அன்னங்களையும்
ஆபரணங்களையும் இட்டேன்.
அப்பொழுது பல தரித்திரர்கள்
என்னை அணுகி, "ஒரு வஸ்திரமாவது
கொடு" என்றனர். "இது சத்திரம்
அல்ல; வேண்டுமானால் பணத்தை
கொடுத்து பெற்றுக்கொள்"
என்று விரட்டினேன். அன்றிரவு
எனக்கு அதிஸாரம் கண்டது.
படுக்கையில் படுத்துக்
கொண்டேன். பந்துக்கள்
அனைவரும் அருகில் வந்தனர்.
அவர்களையும் பீரோவிலுள்ள
தங்க பாத்திரம் ரத்தினம்
நகைகள் முதலியவற்றையும்
கண்டேன். 'இவற்றை விட்டு
இறந்துபோக வேண்டுமே!'
என்று வருந்தினேன். இதைக்
கண்டதும் என் புதல்வன்
எனக்கு உபதேசம் செய்ய
தொடங்கினான்.
"தந்தையே,
நீர் வருத்தமடைந்து என்ன
பயன்? பந்துக்களை நினைத்து
வருந்துவதனால் என்ன லாபம்?
இவர்கள் உண்மையில் உமக்குப்
பந்துக்களல்லர்; பகைவர்களே.
அன்னை அத்தன் என் புத்திரன்.
பூமி வாசவார்குழலாள்
என்று மயங்கி கிடப்பதனால்
என்ன பயன்? பரலோகத்துக்கு
பாதேயம்போன்ற தானம்
முதலியவற்றை செய்ய வேண்டும்.
ஓம் நமோ நாராயணாய என்று
மத்தகத்திடைக் கைகளைக்
கூப்பி வணங்க வேண்டும்.
இது வரையில் பணத்தை சேமிப்பதிலேயே
புத்தியை செலுத்திவிட்டீர்.
ஓர் அந்தணரையாவது கூப்பிட்டு
அன்னமிட்டதில்லை. பண
ஆசையினால் புராணங்களை
உபந்யஸித்தீர். அழகிய
சாஸ்த்ரார்தங்களை விட்டு
உலகத்தை ரஞ்சிப்பதிலேயே
நோக்கமுடையவராக இருந்தீர்.
நீர் யார்? நான் யார்? உமக்கும்
எனக்கும் என்ன ஸம்பந்தம்?
ஏதோ ஒரு கர்ம ஸம்பந்தத்தினால்
நீர் தந்தையாகவும் நான்
புதல்வனாகவும் இருக்கிறோம்.
ஒரு ஜீவனுக்கு மற்றொரு
ஜீவன் தஞ்சனல்லன். விஷ்ணுவின்
மாயை திரைபோலிருந்து
நம்மை மறைத்துவிடுகிறது.
அவரவர் செய்த புண்ணிய
பாபங்களை அவரவர் அநுபவித்தே
தீரவேண்டும்" என்று என்
புதல்வன் உபதேசம் செய்ததைக்
கேட்டதும், என் அருகில்
இருந்த உத்தமியான மனைவி
எழுந்திருந்து பீரோவைத்
திறந்து ரத்தினங்களையும்
தங்க கட்டிகளையும் என்னிடம்
கொண்டு வந்து கொடுத்து
பேச ஆரம்பித்தாள்.
"நாதா
! பல பாவங்களை செய்து இந்த
அழுக்கு உடலைப் பெற்றுள்ளோம்.
கடவுளை வணங்குவதற்கும்,
ஸத்கார்யங்களை செய்வதற்கும்,
உயர்ந்த அந்தணர்களை ஆராதித்து
உயர்ந்த கதியை பெறுவதற்கும்
அன்றோ இவ்வுடல் நமக்கு
கிட்டியுள்ளது? இந்த
உடலை சரியான வழியில்
கொண்டு போகாமல் துஷ்ட
குதிரைகள் போலுள்ள இந்த்ரியங்களுக்கு
வசப்படுத்தி இவற்றின்
இஷ்டப்படி விடுபவனை விட
வேறு மூடன் இல்லை. ஆகையால்
நீங்கள் பல பாவங்களை
செய்திருக்கிறீர்கள்.
அந்த பாவங்கள் போவதற்காக
இதோ இருக்கும் பொருள்களை
தரித்திரனான அந்தணனுக்கு
கொடுங்கள். கோதானம்
செய்யுங்கள். வேதம் ஓதின
அந்தணருக்கு ஸாளக்கிராம
சிலையை ஸமர்ப்பியுங்கள்.
நம் தோட்டத்துக்கு அருகிலுள்ள
இரண்டு வேலி நிலத்தை
பிராமணருக்கும் கோயில்
பூஜைக்கும் உபயோகப்படும்படி
செய்யுங்கள் சத்திரங்களிலும்
நாற்சந்திகளிலும் சேரும்
வழிப்போக்கர்கள் போல
நாம் இருக்கிறோம்., உங்களுக்கு
மனைவியா இருக்க நான்
கடமைப் பட்டிருந்தேன்.
"உலகத்தில்
ஒருவன் ஸம்பாதித்த பொருள்ள்
அவன் இறந்த பிறகு அவனுடன்
செல்வதில்லை. எவ்வளவு
ஸம்பாதித்தாலும் அவற்றை
எடுத்துக் கொண்டு போக
முடியாது. பந்துக்களும்
நண்பர்களும் அழுது கொண்டு
ச்மசானம் வரையில்தான்
வருவார்கள். எனவே அவனுக்கு
உதவி புரிய எவனும் வருவதில்லை.
அவனவன் செய்த புண்ணிய
பாபங்கள்தாம் விடாமல்
தொடர்ந்து வரும். எனவே
நாம் ஸம்பாதித்த பொருளை
நேராக எடுத்துக் கொண்டு
போக முடியாவிட்டாலும்
அதை தான தர்மங்கள் மூலமாக
மாற்றி எடுத்துச் செல்லலாம்.
ஆகையால் நீங்கள் ஸம்பாதித்த
பொருளை தானதர்மங்கள்
செய்து அதனால் உண்டாகும்
புண்ணித்துடன் ஸ்வர்க்க
லோகத்தை அடைய முயற்சி
செய்யுங்கள்.
"நீங்கள்
ஜீவித்திருக்கும்போதே
நல்ல தானங்களைச் செய்ய
வேண்டும். வீடு மனைவி
குழந்தை முதலியவற்றில்
பற்றுள்ளவன், நுனிக்கிளியில்
உள்ள பழத்தைப் பறிப்பதற்கு
ஏறியவன் கீழே விழுவதுபோல்
அதோகதியை அடைவான். புல்லை
மேய்ந்துபொண்டு வரும்
பசு நான்கு பக்கங்களிலும்
புல்லால் மறைக்கப்பட்டிருக்கும்
கிணற்றை அறியாமல் புல்லிலுள்ள
ஆசையால் கிணற்றில் விழுந்து
மாண்டுபோவதுபோல், ஸம்ஸாரத்தில்
பொருள்களில் ஆசைப்படுகிறவன்
அழிந்துவிடுவான்; ரோகத்தால்
பீடிக்கப்பட்டவன் மருந்துகளைச்
சாப்பிட்டும், அபத்தியங்களை
உட்கொண்டால்அடையும்
தீய பயனையும் அடைவான்".
இப்படி மனைவியும் எனக்கு
உபதேசம் செய்தாள்.
இந்த
உபதேசங்கள் என் காதில்
விழவேயில்லை. இன்னமும்
பிழைக்க வேண்டும்; மேலும்
பொருளைத் திரட்ட வேண்டும்
என்ற அவாதான் குடிகொண்டிருந்தது.
இந்த சமயத்தில், கையில்
பாசங்களை வைத்து கொண்டவர்களும்,
கறுத்த உருவமுடையவர்களும்,
பயங்கர காட்சியை அளிப்பவர்களுமான
யம படர்கள், "கொலை செய்!
இரண்டாகப் பிள! வெட்டு!"
என்று கத்திக் கொண்டும்,
புருவங்களை நெறித்துக்
கொண்டும், பற்களைக்
கடித்துக் கொண்டும்,
பல ஆயுதங்களை எடுத்துக்
கொண்டும் என் அருகில்
வந்தனர். என்னைப் பாசங்களினால்
கட்டி தலைகீழாக இழுத்துச்
சென்றனர். போகும் வழியில்
பல வகையாக ஹிம்ஸித்தனர்.
அதை இப்போது நினைத்தாலும்
உடல் நடுங்குகிறது. செந்நாய்கள்
காலை கடித்தன. கற்பாறைகளில்
தலைகீழாக அடித்தனர்.
நெருப்பை மேலே வர்ஷித்தனர்.
அஸிபத்ர வனத்தில் இழுத்துச்
சென்றனர். சூரிய வெப்பத்தினால்
கொளுத்தப்பட்ட மணலில்
புரட்டினர். பல தேள்களும்
பாம்புகளும் நிறைந்த
பள்ளத்தில் தள்ளினர்.
பசி தாகத்தால் துன்புற்றுத்
'தண்ணீர் அன்னம் கொடு'
என்று கேட்டால், 'நீ அதிகப்
பணத்தை சம்பாதித்து பலருக்கு
தானம் செய்தாயே!" என்று
ஏளனம்செய்து, அசுத்தமான
வஸ்துக்களை உண்ணச் செய்வார்கள்.
இப்படிப் பல வருஷங்கள்
கஷ்டப்பட்டேன்.
பிறகு
புழு பூச்சியாகப் பிறந்தேன்.
காக்கையாகவும் பன்றியாகவும்
கழுதையாகவும் கழுகாகவும்
பிறந்து பல கஷ்டங்களை
அநுபவித்தேன். இப்போது,
முன்பு உபந்யாஸகாலங்களில்
அர்த்தமற்ற பல சொற்களை
சொல்லி ஜனங்களை ரஞ்சிக்க
செய்தேனானபடியால், அர்த்தமற்று
கத்தும் தவளை ஜன்மத்தை
அடைந்தேன். ஜாதிஸ்மரணம்
எனக்கு உண்டானபடியால்
மரணத்தை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன. முன்பு
புராணம் சொன்னபோது,
'பணத்தை அதிகம் திரட்ட
வேண்டும்' என்று எண்ணி
பத்து அந்தணர்களுக்கு
அஹ்ருதயமாக அன்னமிட்டேன்;
தக்ஷிணையும் கொடுத்தேன்.
கார்த்திகைமாதத்தில்
நெல்லி மரத்தினடியில்
நதியில் ஸ்நானம் செய்தேன்.
அப்போது ஏற்பட்ட நற்செயலினால்
இப்போது இங்கே புராணம்
சொல்பவரின் திருவடி
ஸம்பந்தம் ஏற்பட்டது.
அதனால் முன் நடந்தவையாவும்
நினைவுக்கு வந்தன. இனி
நான் ஓர் அந்தணனாகப்
பிறந்து, ஸாளக்ராமங்களை
பலருக்கு தானம் செய்யப்
போகிறேன். அதனால் எல்லாப்
பாவங்களினின்றும் விடுபட்டு
ஸ்வர்க்கத்தை அடையப்
போகிறேன். வெகு காலம்
ஸ்வர்க்கத்தில் ஸுகங்களை
அநுபவித்து மறுபடி பிராம்மணனாக்
பிறந்து விஷ்ணுவிடத்தில்
பக்தியை செலுத்தி துலா
மாதத்தில் காவேரியில்
ஸ்நானம் செய்து விஷ்ணுலோகத்தை
அடையப்போகிறேன்.
பாம்பே,
நீ சுகமாக வாழ்வாயாக!
இதுவரை என் வரலாற்றை
கூறினேன். இனி உன் விருத்தாந்தத்தை
கூறுகிறேன், கேள். நீ முன்பு
வைசியனாக பிறந்தாய்.
மிக்க செல்வமுடையவனாக,
நீயும் காஞ்சீபுரத்தில்
பிறந்தாய். பாலாற்றில்
கார்த்திகை மாதத்தில்
ஸ்நானம் செய்து, நான்
சொன்ன கார்த்திகையின்
மாஹாத்ம்யத்தை கேட்டாய்.
விரதம் முடிந்த சமயத்தில்
எனக்கு தக்ஷிணை கொடுக்காமல்
இருந்துவிட்டாய். அதிக
பேராசை கொண்டவன் நீ
ஆயினும் ஒரு பிராமணனுக்கு
அன்னமிட்டாய். பிறகு
பல பிறவிகளை எடுத்துப்
பல துன்பங்களை அடைந்தாய்.
இனி மறு பிறவியில் ஒரு
ஸமயம் உன்னை யானை துரத்திக்
கொண்டே செல்லும். அப்போது
கார்த்திகை மாதம், ஸோம
வாரம், நீ யானையினிடமிருந்து
பயந்து கிருஷ்ணா நதியில்
குதித்து விடுவாய். சிவ
சிவா என்று பரமசிவனைத்
தியானம் செய்து கொண்டு
சிவலோகத்தை அடைவாய்.
பாலாற்றில் கார்த்திகைமாதத்தில்
ஸ்நானம் செய்ததனாலும்
ஸத்கதையைக் கேட்டதனாலும்
வெகு காலம் கழித்தாவது
உனக்கு நற்கதி அவசியம்
ஏற்படும்.
"இனி நீ ஒருவருக்கும்
துரோகம் செய்யாதே. தானாக
கிடைக்கும் பொருளை பெற்று
திருப்தியுடன் இரு" என்று
தவளை பல உபதேசங்களை செய்து
முடித்தது.
நாரதர் கூறினார்
- இவ்வாறு பாம்புக்கு
தவளை உபதேசம் செய்ததும்
பாம்பின் விஷப்பற்கள்
பட்டிருந்தபடியால் உடலெல்லாம்
விஷமேறி தவளை இறந்துவிட்டது.
அப்போது ஆகாயத்தில்
ஒரு விமானம் தெரிந்தது.
அதில் ஓர்அழகிய கந்தர்வ
உருவத்துடன் இறந்து போன
தவளை காட்சியளித்தது.
நானா புஷ்பங்களாலும்,
அநேக பீதாம்பரங்களாலும்
அலங்கரிக்கப்பெற்று
புன்சிரிப்புடன் கந்தர்வன்
விளங்கினான். விமானத்தில்
இருந்துகொண்டே, "பாம்பே,
நான் சொன்னதை மனத்தில்
வைத்துக் கொள். நற்காரியங்களை
செய். நீயும் சீக்கிரத்தில்
நல்ல உலகை அடைவாய் " என்று
சொல்லிக் கொண்டே, கந்தர்வ
உருவம் கொண்ட தவளை ஸ்வர்க்க
லோகத்தை அடைந்தது.
தர்மபுத்திரனே,
கார்த்திகை மாதத்துக்கு
எவ்வளவு மகிமை உள்ளது
என்பதை கவனித்தாயா? இதை
சொல்பவனும்கேட்பவனும்
ஸத்கதியை அடைவான். கார்த்திகையில்
காவேரி நதியில் ஸ்நானம்
செய்பவன் எவ்வளவு பயனை
அடைவான் என்பது வார்த்தைக்கும்
மனத்துக்கும் எட்டாதது.
இவ்வாறு
நாரதர் கார்த்திகை மாதத்தின்
மகிமையைப் பஞ்ச பாண்டவர்களுக்கு
உபதேசம் செய்தருளினார்.
Chapter 10 & 11
|