ஹரிச்சந்திரன், "ஸ்வாமிந்
அகஸ்திய மாமுனிவரே, ஸர்வ
தர்மங்களையும் உணர்ந்தவரே,
தேவரீரிடமிருந்து வேதராசியின்
பிரபாவத்தை நன்கு உணர்ந்தேன்.
காவேரியின் மகிமையையும்
அறிந்து கொண்டேன்.
ரமாதயித
ரங்கபூரமண க்ருஷ்ண விஷ்ணோ
ஹரே
த்ரிவிக்ரம ஜநார்தந
த்ரியுகநாத நாராயண I
இதீவ
சுபதாநி ய: படதி நாமதேயாநி
தே
ந தஸ்ய யமவஸ்யதா நரகபாதபீதி:
குத:
என்றபடி எம்பெருமானின்
நாம ஸங்கீர்த்தனத்தின்
ஏற்றத்தையும் கேட்டு
மனமகிழ்சி அடைந்தேன்.
இவ்விஷயங்களைக் கேட்டு
என் மனம் மிகவும் புனிதமாயிற்று.
தேவரீர் முன்பு காவேரியில்
ஸ்நானம் செய்வதனால் புத்திரஸந்ததி
ஐச்வரியம் ஆரோக்கியம்
சத்ருஜயம் இவற்றைப் பெற்று
க்ஷேமத்தைப் பெறுவான்
என்று சொன்னீர். இந்தக்
காவேரி ஸ்நானம் எந்த
மாதத்தில் செய்ய வேண்டும்?
எப்படிச் செய்ய வேண்டும்?
புண்டரீகாக்ஷனான எம்பெருமானை
எப்போது உபாஸிக்க வேண்டும்?
எந்தப் புஷ்பங்களினால்
எம்பெருமானை அர்ச்சிக்க
வேண்டும்? இவற்றை கருணையுடன்
விசேஷமாக எனக்குச் சொல்ல
வேண்டும்" என்றான்.
அகஸ்தியர்
கூறலானார் - அரசனே, நீ நல்ல
விஷயங்களை அறிய வேண்டும்
என்ற எண்ணமுள்ளவன். இம்மாதிரி
ஸத் விஷயங்களில் புத்தியைச்
செலுத்துபவர்கள் இவ்வுலகத்தில்
கிடைப்பது அரிது. உண்டி
உடை முதலியவற்றிலேயே
மனத்தைச் செலுத்திப்
பொழுதைப் பலர் வீணாக்குகின்றனர்.
நல்ல விஷயத்தில் உனக்குக்
காவேரியின் மகிமையைக்
கூறுகிறேன். கங்கை முதலிய
புண்ணிய தீர்த்தங்களில்
ஸ்நானம் செய்ய வேண்டும்
என்ற எண்ணமும், திருக்கோயில்களுக்குச்
சென்று அர்ச்சையிலுள்ள
கடவுளை வணங்க வேண்டும்
என்ற எண்ணமும், உயர்ந்த
பாகவதர்களை வணங்கி ஆராதிக்க
வேண்டும் என்ற ருசியும்
சுலபமாக எல்லாருக்கும்
உண்டாவதில்லை. ஜன்மாந்தரத்தில்
புண்ணியம் பண்ணினவர்களுக்கே
இவை ஏற்படும். அது போல்
காவேரியின் பிரபாவத்தைக்
கேட்க வேண்டும் என்ற
அபிநிவேசமும் முற்பிறவியில்
ஸுக்ருதம் செய்தவர்களுக்கே
உண்டாகும்.
ஒரு ஸமயம்
அர்ஜுனன் தீர்த்த யாத்திரைக்குச்
சென்றான். காவேரியின்
கரையை அடைந்தான். அங்கு
வைசாக (வைகாசி) மாதத்தில்
ஸ்நானம் செய்து அங்குள்ள
முனிவர்களுடன் வசித்து
வந்தான். அப்போது அங்கு
ஒரு பெளராணிகர் காவேரியின்
மகிமையைக் கூறி வந்தார்.
அதைக் கேட்டு மிக்க சந்தோஷத்துடன்
வஸத்ரம் ஆபரணம் தனம்
முதலியவற்றை அந்தப் பெளராணிகருக்குக்
கொடுத்துத் தினந்தோறும்
காவேரியில் ஸ்நானம் செய்து
நதிக்கரையிலுள்ள சங்கநாதனை
ஸேவித்து வந்தான். பிறகு
துவாரகையை அடைந்து கிருஷ்ணனின்
தங்கையான சுபத்திரையை
மணந்து கொண்டான். காவேரியில்
ஸ்நானம் செய்த மகிமையால்,
இழந்த ராஜ்யத்தைப் பெற்றுப்
பகைவர்களை வென்று தன்
பிராதாக்களுடன் சுகமாக
வாழ்ந்தான்.
ஹரிச்சந்திரன்,
"முனிச்ரேஷ்டரே, தேவரீர்
சொல்வது கேட்டு என்
மனம் மிகவும் வியப்படைகிறது.
அர்ஜுணன் எதற்காகத் தீர்த்தயாத்திரை
செய்யப் புறப்பட்டான்?
கண்ணனின் தங்கையான சுபத்திரையை
எப்படி மணந்தான்? போரில்
சத்ருக்களை எவ்வாறு வென்றான்?
இவ்விஷயங்களை விஸ்தாரமாக
எனக்குக் கூற வேண்டும்"
என்றான்.
அகஸ்தியர்
சொன்னார் - முன்பு பாஞ்சால
அரசனின் பெண்ணான திரெளபதியைப்
பாண்டவர்கள் ஐவரும் மணந்தார்கள்.
திரெளபதி குணத்தினாலும்
அழகினாலும் எல்லாப் பெண்களையும்விட
மேன்மை பெற்றவளாக விளங்கினாள்.
எனவே பாண்டவர்கள் ஐவரும்
அவளிடத்தில் அதிக ஆசை
உடையவர்களாக இருந்தனர்.
திரெளபதி தன் கணவர்களான
ஐவரிடத்திலும் அன்பு
உடையவளாகவே இருந்தாள்.
ஒரு பெண்ணைப் பலர் மணந்து
கொண்டால் எப்படியாவது
ஒரு சமயம் ஒருவருக்கு
ஒருவர் விரோதம் உண்டாகும்
என்பதை எண்ணி நாரத பகவான்,
இவர்களுக்குள் விரோதம்
வராமல் தடுப்பதற்காக
அவர்கள் இருப்பிடம் வந்தார்.
திரெளபதியும்
பாண்டவர்களும் நாரதரை
வணங்கினார்கள். தேவரிஷியான
நாரதர் சொன்னார் - பாண்டவர்களே,
திரெளபதியே, உங்களுக்கு
நன்மை செய்வதற்காகவே
இப்போது இவ்விடம் வந்தேன்.
நான் சொல்வதை நன்கு
அலோசித்து அதுமாதிரி
நீங்கள் நடந்துகொள்ள
வேண்டும். புருஷர் பலர்
ஒரே பெண்ணிடத்தில் ஆவல்
கொண்டால் எவ்வளவு நண்பர்களாக
இருந்தபோதிலும் கட்டாயம்
விரோதம் வந்தே தீரும்.
உலகில் பெண்கள் இரண்டு
வகையாக இருப்பார்கள்.
1.
உயர்ந்த பெண்கள் - இவர்கள்
எப்போதுமே பரிசுத்தர்களாயும்,
தீங்கைச் செய்யாதவர்களாயும்,
நற்காரியங்களிலேயே கருத்தைச்
செலுத்துபவர்களாயும்,
தம் கணவனுக்கும் பெரியவர்களுக்கும்
பணிவிடை செய்பவர்களாயும்
இருப்பர். புக்ககத்தையும்
பிறந்த அகத்தையும் ஓங்கச்
செய்வார்கள். உத்தமப்
பெண் தன் கணவன் ரோகமுள்ளவனாயும்,
தனம் இல்லாதவனாயும்,
எப்போதும் தன்னிடத்தில்
கோபம் உள்ளவனாயும்,
அறிவில்லாதவனாயும் இருந்தபோதிலும்
அவனே தனக்குத் தெய்வம்
என்று கொண்டாடுவாள்.
இத்தகைய பெண்களினால்
உலகுக்கே நன்மை உண்டாகும்.
மழை பெய்யும்.
2. தாழ்ந்த
பெண்கள் - இவர்களால் குடும்பத்துக்குள்
கலகம் ஏற்படும். ஒற்றுமையுள்ள
சகோதரர்களையும் பிரித்துவிடுவார்கள்.
உள்ளத்தில் கோபமுள்ளவர்கள்.
வெளியில் சிரித்துக்
கொண்டிருப்பார்கள்.
நல்லது கெட்டது அறிந்திருந்தும்
தீய வழியிலேயே செல்வார்கள்.
பாவங்களைச் செய்தால்
யமன் தண்டிப்பானே என்று
கலங்கமாட்டார்கள். தம்
வயிறு நிரம்புவதையே குறிக்கோளாகக்
கொண்டு வாழ்க்கை நடத்துவார்கள்.
வஸ்திரம், ஆபரணம், புஷ்பம்,
பழம் முதலியவற்றைக் கொடுக்கும்போது
மட்டும் கணவனிடத்தில்
அன்பைக் காட்டுவார்கள்.
வேறு சமயத்தில் காரணமில்லாமலே
வெறுப்படைவார்கள். சுற்றத்தார்
ஏதேனும் சொல்வார்களே
என்று பயப்பட மாட்டார்கள்.
கணவன் ரோகியாகவோ, தனம்
இல்லாதவனாகவோ இருந்தால்,
'இவனை மணந்து என்ன சுகத்தை
அடைந்தேன்?' என்று வெறுப்புக்
கொள்வார்கள். தகப்பனின்
குலத்தையோ, கணவன் குலத்தையோ
கருத மாட்டார்கள். இவர்கள்
புருஷனைவிட நான்கு மடங்கு
சாப்பிடுவார்கள். எண்மடங்கு
காமம் உடையவர்கள்.
திரெளபதி,
நீ மிகவும் உயர்ந்த பெண்.
கணவன் இஷ்டப்படி நடந்துகொள்ளும்
திறமை உடையவள். ஆயினும்
கணவர் உனக்கு ஐவரானபடியால்
உனக்காக அவர்களுக்குள்
மனஸ்தாபம் அவசியம் வரும்.
இவ்விஷயத்தில் ஒரு கதை
சொல்கிறேன், கேள்.
முன்பு
ஒரு காலத்தில் ஸுந்தன்
உபஸுந்தன் என்று இரு
சகோதரர்கள் இருந்தனர்.
இவர்கள் அஸுர வம்சத்தைச்
சேர்ந்தவர்கள். ஒருவருக்கு
ஒருவர் மிகவும் நட்புடையவர்கள்.
தங்கள் உயிரைக் கொடுத்தாவது
மற்றவனைக் காக்க வேண்டும்
என்ற மனப்பான்மை உடையவர்கள்.
இவர்கள் ஒன்று சேர்ந்து
உலகைத் துன்புறுத்தி
வந்தனர். இவ்விருவரால்
தேசத்துக்குப் பல தீமைகள்
உண்டாயின. இவர்களை வெல்ல
யாராலும் முடியபில்லை.
லோக
கண்டகர்களான இவர்களைக்
கொல்லத் தேவேந்திரன்
ஒரு சூட்சி செய்தான்.
தேவதாஸியான திலோத்தமையை
இவர்களிடம் அனுப்பினான்.
அவள் அழகிய புஷ்பங்களையும்
வஸ்த்ரங்களையும் ஆபரணங்களையும்
அணிந்து இவர்கள் இருப்பிடம்
வந்தாள். அவள் தன் கால்களில்
சதங்கைகளை அணிந்துகொண்டு
அதன்மூலம் சப்தம் செய்து
கொண்டே வந்தாள். அந்த
சப்தம் இவ்விருவர் காதுகளிலும்
விழுந்தது. புஷ்பங்களின்
வாசனையும், அவளது உடலில்
உண்டான சுகந்தமும் இவர்களது
மூக்கை துளைத்தன. அவள்
வரவைக் கண்ணுற்றார்கள்.
அவளைக் கண்டதும் மனம்
ஒருவித மாறுதலை அடைந்தது.
ஸுந்தன்
(தமையன்) தம்பியைப் பார்த்து,
"உன் அண்ணி வருகிறாள்.
உனக்கு அவள் தாய். அவளுக்கு
நீ பணிவிடை செய்ய வேண்டும்"
என்றான். அதைக் கேட்ட
உபஸுந்தன், "உன் நாட்டுப்
பெண் வருகிறாள். அவளுக்கு
வேண்டியதைச் செய்ய வேண்டும்.
அவளை வேறு விதமாக நினைத்தால்
உனக்கு தோஷம் உண்டாகும்"
என்றான்.
இப்படி ஒருவருக்கு
ஒருவர் வார்த்தை மேலிட்டுக்
கொண்டே வந்தது. திலோத்தமை,
"நீங்கள் இருவரும் சமாதானம்
செய்து கொண்டு யாராவது
ஒருவர் என்னை அடையலாம்"
என்றாள். அவளது அழகிலும்
நடையிலும் பேச்சிலும்
ஈடுபட்ட இவர்களுக்கு
சமாதானத்துக்கு வழி ஏது?
இவர்களது கையில் உள்ள
கதைதான் ஒருவிதமான தீர்மானத்தை
செய்து முடிந்தது. ஒருவரை
ஒருவர் கதையினால் அடித்துக்
கொண்டு மாண்டனர். திலோத்தமை,
'தேவகாரியம் சரிவர நடைபெற்றது'
என்று எண்ணி இருப்பிடம்
அடைந்தாள். எனவே திரெளபதியே,
பாண்டவர்களே, எப்படியாவது
உங்களுக்குள் விரோதம்
ஏற்படும். அதற்கு இடம்
தராமல் நீங்கள் நடந்துகொள்ள
வேண்டும்.
மனத்தில்
மாறுபாடு ஏற்படாமல் நடந்துகொள்ள
நான் ஒரு வழி சொல்கிறேன்;
அதன்படி நடந்து கொள்ளுங்கள்
என்றார் நாரதர்.
இதைக்
கேட்ட பஞ்ச பாண்டவர்கள்
தங்களுக்குள் ஆலோசனை
செய்தார்கள். 'நாரத முனிவர்
கூறுவது சரிதான். நமக்குள்
எவ்வளவு ஓற்றுமை இருந்தபோதிலும்
அழகிய கண்களையும், நீண்ட
கூந்தலையும், விசாலமான
ஜகனத்தையும் உடைய திரெளபதி
விஷயமாக விரோதம் அவசியம்
உண்டாகக்கூடும். ஒரே
சமயத்தில் இந்தத் தரெளபதியுடன்
நாம் ஐவர் ஸந்தோஷமாக
இருக்க வேண்டும் என்று
எண்ணினால் நமக்குள் பகைமை
ஏன் வராது? எனவே நாரத முனிவர்
சொல்வதுபோல் விரோதம்
ஏற்படாத முறையில் நடந்து
கொள்ள வேண்டும்' என்று
எண்ணினார்கள். உடனே முனிவரை
வணங்கி, "முனிச்ரேஷ்டரே,
நீர் சொல்கிறபடி நாங்கள்
நடந்துகொள்கிறோம்.
எப்படி நடந்துகொண்டால்
எங்களுக்குள் மனஸ்தாபம்
வராதோ அத்தகைய மார்க்கத்தைக்
கூற வேண்டும்" என்றனர்.
நாரதர்
கூறினார் - பாண்டுபுத்திரர்களே,
திரெளபதியை நீங்கள் அனைவரும்
ஒரே சமயத்தில் மனைவியாக
நினைக்கக் கூடாது. ஒவ்வொரு
வருஷமும் ஒவ்வொருவர்
மனைவியாக நினைக்க வேண்டும்.
அதாவது தர்மபுத்திரர்
முதல் வருஷம் மனைவியாகக்
கருதி அவளுடன் இன்புற
வேண்டும். அந்த வருஷத்தில்
மற்ற நால்வரும் தரெளபதியை
அண்ணியாகவும் தாயாகவும்
நினைக்க வேண்டும். அடுத்த
வருஷம் பீமசேனன் மனைவியாகக்
கருத வேண்டும். அப்போது
தர்மபுத்திரர் இவளை நாட்டுப்
பெண்ணாகவும், அர்ச்சுனன்
முதலியோர் தாயாகவும்
நினைக்க வேண்டும். இப்படியே
மற்றவர்களும் நடந்து
கொள்ள வேண்டும். இம்மாதிரி
ஒரு ஸங்கேதம் செய்து
பொண்டால் எப்போதுமே
உங்களுக்குள் பகைமை ஏற்படாது.
தர்மத்துக்கும் மாறுதல்
ஏற்படாது. இதில் நீங்கள்
ஒன்று அவசியம் கவனிக்க
வேண்டும். உங்களில் ஒருவர்
திரெளபதியை மனைவியாகக்
கொண்டு களிக்கும்போது
மற்றொருவர் பார்த்துவிட்டால்
அப்போது உண்டான பாவத்தைப்
போக்க முயற்சி செய்ய
வேண்டும்" என்றார்.
பாண்டவர்கள்,
"முனிவரே, தேவரீர் சொல்வது
வாஸ்தவம்தான். ஒரு புருஷன்
தன் மனைவுயுடன் இருக்கும்போது
மற்றொருவன் பார்த்தால்,
பார்ப்பவனுக்கும் பெரிய
பாவம் ஏற்படும். அதை அவன்
ஏதாவது பிராயச்சித்தம்
செய்து போக்கிக் கொள்ள
வேண்டும். எங்களுள் ஒருவருக்கு
இவள் மனைவியாக இருக்கும்போது
மற்றவர்கள் சமீபத்திலும்
செல்லமாட்டோம். இது
சத்தியம். ஒரு சமயம், அவர்கள்
சேர்ந்திருக்கும்போது
அறியாமையால் பார்த்துவிட்டால்
அந்த பாபத்தைப் போக்க
வழியும் தேவரீரே கூற
வேண்டும்" என்றனர்.
நாரதர்
சொன்னார் - ராஜபுத்திரர்களே,
உலகில் திருடுதல், கள்
குடித்தல், பிறர் பணம்
பெற்றால் அதைக் கண்டு
பொறாமை, பொய் பேசுதல்,
பிறர் மனைவியைக் காதலித்தல்,
புறங்கூறுதல், பரபுருஷன்
தன் மனைவியுடன் இருக்கும்போது
பார்த்தல் முதலிய பல
பாவச் செயல்கள் உண்டு.
ஒவ்வொருவனும் இவற்றில்
ஒவ்வொன்றையும் பல பிறவிகளில்
செய்திருப்பான். இப்படிச்
செய்யப்படாத பாவங்களே
இல்லை. இவற்றைப் போக்கப்
பிராயச்சித்தங்கள் பல
சொல்லப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிராயச்சித்தத்தினாலும்
ஒவ்வொரு பாவம் கழியும்.
ஆனால் எல்லாப் பாவங்களும்
போக வேண்டுமானால் அதற்கு
ஒரு வழி உண்டு. காவேரி,
கங்கை, யமுனை, ஸரஸ்வதி,
கோதாவரி, கிருஷ்ணா முதலிய
புண்ய தீர்த்தங்களில்
ஸ்நானம் செய்தால் பாவமனைத்தும்
ஒழியும். புண்ணிய தீர்த்தங்களுக்கு
அவ்வளவு மகிமை உண்டு.
புனிதமான தீர்த்தங்களில்
ஸ்நானம் செய்வதனால் ஏற்படும்
பயனைப் புலன் ஐந்தும்
நொந்து ஊன் வாடத் தூக்கமின்றிச்
செய்யும் தவத்தினாலும்,
இரவும் பகலும் சாஸ்திரங்களைப்
பயிற்சி செய்வதனாலும்,
யாகங்களைச் செய்வதனாலும்,
கிணறு குளம் வெட்டுவதனாலும்
அடைய முடியாது. புண்ணிய
தீர்த்தங்களிலும் காவேரி
எனப்பெறும் தீர்த்தம்
பரிசுத்தமானது. பிராம்மணனைக்
கொன்றவனும் இதில் நீராடிப்
பரிசுத்தியை அடைகிறான்.
தாய், தந்தை இவர்களது
இரு வம்சத்தையும் புனிதமாக்குகிறான்.
இதில் ஸ்நானம் செய்து
இருபத்தொரு தலைமுறை
சுவர்க்கலோகத்தை அடைகிறான்.
மாகம், மாதவம், துலா, கார்த்திகம்
இந்த மாதங்களில் காவேரியில்
ஸ்நானம் செய்பவன் எல்லாப்
பாவங்களிலிருந்தும்
விடுபடுவான்.
எனவே, பாண்டு
புத்திரர்களே, உங்களுக்குக்
கீழ்கூறிய பாவம் ஏற்பட்டால்
அதைப் போக்கத்தீர்த்த
யாத்திரை செய்ய வேண்டும்.
அதிலும் காவேரிக்குச்
சென்று அதில் நீராட வேண்டும்.
திரெளபதியே, நீ இவர்களில்
ஒருவனைக் கணவனாக நினைத்திருக்கும்போது
மற்றவர்களை மைத்துனராக
நினைத்து நடந்துகொள்ள
வேண்டும். இம்மாதிரி
நடந்து கொண்டால் உனக்கும்
ஸத்கதி ஏற்படும் என்று
கூறினார்.
அகஸ்தியர்
கூறலானார் - இப்படி ரகஸ்யமாயும்
சிறந்த தர்மமாயும் உள்ள
விஷயத்தை நாரதர் கூற,
இதைக் கேட்ட தர்மபுத்திரர்
மிக்க சந்தோஷத்துடன்
அவரைப் பூஜித்தார். காவேரியின்
மகிமையைக் கேட்டு கண்களால்
ஆனந்த பாஷ்பத்தைப் பெருக்கினார்.
அவரது மனது நிர்மலமாயிற்று.
பிறகு நாரதரைப் பார்த்து
மகிழ்ச்சியுடன், "முனிவரே,
காவேரியில் துலா மாதத்தில்
எந்தக் காலத்தில் ஸ்நானம்
செய்ய வேண்டும்? அதற்கு
என்ன பயன்? எப்படிச் செய்ய
வேண்டும்? எந்த தேவதையை
மனத்தில் சிந்திக்க வேண்டும்?
க்ருஹஸ்தாச்ரமத்தில்
இருப்பவன் தன் தர்மங்களை
நழுவாமல் எப்படிச் செய்ய
வேண்டும்? அந்த தர்மங்கள்
யாவை? இவை அனைத்தையும்
மறைக்காமல் தேவரீர் எனக்கு
சொல்ல வேண்டும்" என்றார்.
இவ்வாறு
தர்மபுத்திரர் கேட்டதற்கு
நாரத மகரிஷி விடையளிக்கிறார்
- தர்மராஜனின் புதல்வனே,
நீ கேட்கும் விஷயம் சிறியதன்று.
காவேரியின் மகிமையை ஒருவராலும்
சொல்ல முடியாது. எனக்குத்
தெரிந்த வரையில் சொல்கிறேன்.
காவேரியில் காக்கை குளிப்பது
போல் குளித்தாலும் ஏழு
பிறவிகளில் செய்த பாவங்கள்
விலகும். நிர்மலமான மனத்துடன்
ஸங்கல்பபூர்வமாக ஸ்நானம்
செய்தால் கோடிக்கணக்கான
பிறவியில் செய்த பாவங்கள்
விலகும். துலா மாஸத்தில்
காலையில் ஸ்நானம் செய்பவன்
அளவற்ற ஐஸ்வர்யத்தையும்
மோக்ஷத்தையும் பெறுவான்.
ஸ்ரீரங்கத்தில் இரு புறமும்
பெருகும் காவேரியில்
ஸ்நானம் செய்து அங்குள்ள
அரவினணையானை வணங்கி மல்லிகை,
அப்போதலர்ந்த தாமரை,
ரோஜா, முல்லை முதலிய
புஷ்பங்களால் அர்ச்சித்து
பாயஸான்னத்தை நிவேதனம்
செய்தால் அளவற்ற பயனை
அடைவான். ச்ரவணத்தில்,
த்வாதசியில் எம்பெருமானுக்கு
பாயஸான்னத்தை நிவேதனம்
செய்த அந்தணர்களைப் புசிக்க
செய்தால் அரசனாக விளங்குவான்.
எல்லா பூமியையும் பெறுவான்.
பன்னிரண்டு வருஷகாலம்
குருக்ஷேத்ரத்தில் துவாதசியில்
பகவதாராதனம் செய்தால்
என்ன பலன் ஏறபடுமோ அந்த
பலனைக் காவேரிக் கரையில்
ஒரு துவாதசியில் பாகவதாராதனத்தில்
பெறுவான். பெண்களும்
காவேரியில் நீராடி, எம்பெருமானுக்கு
நிவேதனம் செய்த பாயஸான்னத்தை
புசித்தால் புத்திர ஸந்ததியைப்
பெறுவார்கள்.
தர்மபுத்திரனே,
நாம் நம்முடைய பித்ருக்களை
உத்தேசித்து ச்ராத்தம்
செய்து வருகிறோம். அமாவாஸ்யையிலும்
ஸங்க்ரமணங்களிலும் மஹாலயத்திலும்
க்ரஹண காலங்களிலும் அவசியம்
இதை செய்ய வேண்டும். அப்படி
செய்யாதவன் எவ்வளவு வேதவித்தான
அந்தணனாக இருந்த போதிலும்
அடுத்த நிமிஷத்திலேயே,
ஆசார்யனின் சாபத்தால்
த்ரிசங்கு என்னும் அரசன்
சண்டாளனாக ஆனதுபோல்,
இவனும் சண்டாளனாக மாறிவிடுவான்.
அன்னத்தைக் கொண்டு ச்ராத்தம்
செய்ய முடியாவிட்டாலும்,
தகுந்த அந்தணர் நிமந்த்ரணத்துக்குக்
கிடைக்காவிட்டாலும்,
வெளிதேசத்தில் செல்லும்
சமயம் ச்ராத்தத்தைச்
செய்ய முடியாவிட்டாலும்,
ஸூதகம் முதலிய ஆசெளசம்
ஏற்பட்ட போதிலும் ஆமச்ராத்தத்தையாவது
செய்ய வேண்டும். அரிசியையும்
வாழைக்காயையும் தக்ஷிணையுடன்
கொடுத்து ச்ராத்தத்தைப்
பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்படிச் செய்தால் அவனும்
அவன் முன்னோர்களும்
நற்கதி பெறுவார்கள்.
இப்படி
ஆமச்ராத்தத்தைச் செய்யாதவன்
திலதர்ப்பணத்தையாவது
செய்ய வேண்டும். எப்படியாவது
ச்ராத்தத்தை தர்ப்பண
ரூபமாகவாவது செய்தே தீர
வேண்டும். செய்யாவிடில்
பெருத்த பாவத்தை அடைவான்.
இது சாஸ்திரங்களில் சொல்லியுள்ள
விஷயம். எவனொருவன் ஏதோ
காரணத்தினால் அமாவாஸ்யை
முதலிய தினங்களில் இவற்றைச்
செய்யாமல் விடுகிறானோ
அவன் தன் பாவத்தைப் போக்க
காவேரியில் ஸ்நானம் செய்து
துவாதசியன்று பன்னிரண்டு
பிராம்மணர்களை புசிக்கச்
செய்ய வேண்டும். அதிலும்
பாயஸத்தை ரங்கநாதனுக்கு
நிவேதனம் செய்து புசிக்கச்
செய்தால் இதுவரையில்
விட்ட ச்ராத்தங்களைச்
செய்த பலனை அடைகிறான்.
இதையும் செய்ய சக்தியற்றவன்
காவேரியில் ஸ்நானம் செய்து
எம்பெருமானை வணங்கினால்
அந்தப் பலனைப் பெறுகிறான்.
இது உண்மை.
வைசாக மாதத்தில்
காவேரிக் கரையில் தயிர்
சாதத்தைக் கொடுக்க வேண்டும்.
மாக மாதத்தில் வஸ்திரத்தைக்
கொடுத்தால் நற்பலனைப்
பெறுவான். கார்த்திகை
மாதத்தில் குடையை அந்தணர்களுக்கு
அளிக்க வேண்டும். இவற்றை
செய்து தீபத்தால் ரங்கநாதனை
ஆராதிக்க வேண்டும். கங்கையில்
ஸ்நானம் செய்ய வேண்டாம்.
யமுனையை அடைய வேண்டாம்.
திருவணையைப் பார்க்க
வேண்டாம். புஷ்கரம், அயோத்யை,
துவாரகை, பத்ரி, நைமிஷம்,
குருக்ஷேத்திரம் முதலிய
புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு
செல்ல வேண்டாம். எவனொருவன்
துலா மாதத்தில் காவேரியில்
ஒரு முறை ஸ்நானம் செய்கிறானோ
அவன் அடையும் பலனுக்கு
அளவே இல்லை.
ஜனங்கள்
கங்கை, கங்கை என்று பிதற்றுகிறார்களே;
அந்த கங்கை காவேரியிடம்
என்ன செய்ய முடியும்
? தேவதாந்தர ஸம்பந்தத்தைப்
பெற்றதல்லவா கங்கை ? அழகர்
எழுந்தருளியிருக்கும்
மலைச் சிகரத்திலுள்ள
குரங்குகள், 'பரமசிவனின்
ஸம்பந்தத்தைப் பெற்றது
இந்த சந்திரகலை' என்று
கருதி தங்களருகில் வரும்
சந்திரகலையை கையினாலும்
தொடுவதில்லையாம். அது
போல் உள்ள இந்த கங்கையை
எவன் விரும்புவான் ? காவேரி
என்னும் புண்ணிய நதி
இருபுறமும் ரங்கநாதனையே
சூழ்ந்து திகழ்கிறது.
இதைவிட உயர்ந்த நதி எது?
"ஜனங்களே,
நாம் அளவற்ற பாவங்களை
செய்துவிட்டோமே. அவசியம்
நரகத்தில் விழுந்து அளவற்ற
துயரத்தை அடையப்போகிறோம்.
இனி நாம் என்ன செய்வது?
எங்கே போவோம்? யாருடைய
கால்களில் விழுவோம்?"
என்று நீங்கள் பயப்பட
வேண்டாம்" என்று சொல்லி
கொண்டே காவேரி நதி, அலைகள்
என்னும் கைகளை மேலே தூக்கிக்
கொண்டு கர்ஜனை செய்து
வருகிறது. இதைக் கண்டும்
கேட்டுமா காவேரியின்
மகிமையில் ஒருவன் சந்தேகப்படுவான்?
'நான்
காவேரி. என் கணவன் பாற்கடல்.
எங்கள் இருவருக்கும்
உண்டானவள் மஹாலக்ஷ்மி
என்னும் பெண். இந்தப்
பெண்ணுக்கு சமமான கணவன்
ரங்கநாதன். எங்கள் ஜாமாதாவான
ரங்கநாதனுக்கு நான் என்ன
உபசாரம் செய்யப் போகிறேன்?'
என்று எண்ணிச் சாமரம்,
சந்த்ரன், சந்தனம், உயர்ந்த
ரத்தினங்கள், முத்துக்கள்
இவற்றை தன் அலைகள் என்னும்
கைகளால் கொண்டு வந்து
உபசரிக்கிறது காவேரி.
இப்படிப் பல படிகளால்
உயர்ந்த காவேரியில் ஸ்நானம்
செய்வதால் எல்லாப் பாவங்களும்
நீங்கும்.
திரெளபதியே,
பாண்டவர்களே, நீங்கள்
உங்களுக்குள் ஒருவர்க்கு
மனைவியாகத் திரெளபதி
இருந்து களிக்கும்போது
மற்றவர் பார்த்துவிட்டால்
அந்தப் பாவத்தை போக்க
காவேரிக்கு சென்று ஸ்நானம்
செய்ய வேண்டும் என்று
நாரதர் கூறினார்.